பக்கம் எண் :

975

95. திருவரசிலி

பதிக வரலாறு:

     கவுணியர் வேந்தர், அச்சிறுபாக்கம் முதலிய தலங்களை வணங்கி
வழிபட்டகாலத்தில், வேறுபலநதியும் காடும் கடந்து அரசிலியை அடைந்தார்.
இது தொண்டை நாட்டிற்குச் சென்றுமீண்ட காலத்து நிகழ்ச்சி. சேக்கிழார்
சுவாமிகள், திருவரசிலியை மீளுங்கால் எடுத்தோதியதாலும் செல்லுங்கால்
குறிப்பாகவும் காட்டாமையாலும் மீண்டருளும்போது பாடப்பட்டதாகும்
இத்திருப்பதிகம்.

                  பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 231   பதிக எண்: 95

                      திருச்சிற்றம்பலம்

2497.







பாடல் வண்டறை கொன்றை
     பான்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை
     மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை
     மருவிட வல்லியந் தோண்மேல்
ஆடன் மாசுண மசைத்த
     அடிகளுக் கிடமர சிலியே.          1


     1. பொ-ரை: செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று சூழும்
கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும் புனலை உடைய
கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம் பூ ஆகியன குலவி
விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை மாலை மருவ, இடையில்
புலித் தோலை உடுத்தித் தோள்மேல் பாம்பைச்சுற்றிக் கொண்டுள்ள
அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.

     கு-ரை: செஞ்சடையில் குலாவுவன-கொன்றை, பிறை, கங்கை,
கோடல் (வெண்காந்தள்), கூவிள (-வில்வ) மாலை, ஊமத்தம்பூ, தலைமாலை,
வல்லி-உமாதேவியார். மாணம்-பாம்பு நிலத்திலூர்ந்தும் புரண்டும் மாசு
உண்ணுங் காரணத்தாற்பெற்ற பெயர்.