பக்கம் எண் :

982

2506.









அல்லி நீள்வயல் சூழ்ந்த
     அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன்
     நற்றமிழ் பத்திவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச்
     சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி
     வைகலு மகிழ்ந்திருப் பாரே.         11

       திருச்சிற்றம்பலம்



     11. பொ-ரை: நீர்ப் பூக்களை உடைய நீண்ட வயல்கள் சூழ்ந்த
திரு அரசிலி இறைவனைப் போற்றிச் சீகாழிப் பதியில் தோன்றிய நல்ல
ஞானசம்பந்தர் பாடியருளிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும்
நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர். வானுலகெய்தி அமரர்கள்
தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர்.

     கு-ரை: அல்லி-அகவிதழ். (இரவில் பூக்கும் பூக்கள்) நற்றமிழ்-
பிறவிப்பிணிக்கு மருந்தாகிய தமிழாகிய இத்திருப்பதிகம். ‘நாளும் சொல்ல
வல்லவர் வைகலும் மகிழ்ந்திருப்பார்’ ஒருநாள் தவறின் அன்று மகிழ்ந்திரார்
என்பது அவரவர் அநுபவத்தால் உணரப்படும்.

திருஞானசம்பந்தர் புராணம்

ஏறணிந்த வெல்கொடியார் இனிதமர்ந்த பதிபிறவும்
நீறணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி
வேறுபல நதிகானங் கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு அரசிலியை வந்தடைந்தார்.

                                   -சேக்கிழார்.