பக்கம் எண் :

983

96. சீகாழி

பதிக வரலாறு:

    137ஆவது பதிகத் தலைப்பிற் காண்க.

              பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்; 232   பதிக எண்: 96

                  திருச்சிற்றம்பலம்

2507.







பொங்கு வெண்புரி வளரும்
      பொற்புடை மார்பனெம் பெருமான்
செங்க ணாடர வாட்டுஞ்
      செல்வனெஞ் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள்
      வல்லவர் பத்தர்கள் பரவுந்
தங்கு வெண்டிரைக் கானல்
      தண்வயற் காழிநன் னகரே.          1

     1. பொ-ரை: வெண்மை மிக்க முப்புரிநூல் புரளும் அழகிய
மார்பினனாகிய எம் பெருமானும், சிவந்த கண்களை உடைய ஆடும்
பாம்பினைப் பிடித்து ஆட்டுபவனும், செல்வனும், ஆகிய எம் சிவபிரான்
உறையும் கோயிலை உடையது தோல்வியுறாத வேதங்களில் வல்லவர்களும்
பத்தர்களும் பரவுவதும், வெண்மையான அலைகள் வீசும் கடற்கரைச் 
சோலைகளையும் வயல்களையும் உடையதும் ஆகிய சீகாழி
நன்னகர் ஆகும்.

     கு-ரை: 1. வெண்புரி-வெண்ணிறத்தையுடைய நூலாலாகிய முப்புரி.
பங்கம்-தோல்வி; மறைப்பொருள்கள் வேறு எந்நூற் பொருள்களுக்கும்
தோல்வி அடையாமைகுறிக்க, பங்கம் இல் மறைகள். அழியாமை
குறித்ததுமாம்.

     வேதம் நித்தியம், வல்லவர்களும் பத்தர்களும் பரவும் காழி நன்னகர்
என்க.