பக்கம் எண் :

987

2512.

நாறு கூவிள மத்த
     நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன்
     இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர்
     நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ்
     சீர்திகழ் காழிநன் னகரே.           6
   
2513. நடம தாடிய நாதன்
     நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம்
     விரித்தற முரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார்
     இருந்தவர் திருந்தியம் போதிக்
குடம தார்மணி மாடங்
     குலாவிய காழிநன் னகரே.           7


     6. பொ-ரை: மணம்வீசும் வில்வம், ஊமத்தை ஆகியவற்றோடு
பாம்பையும் முடியில் சூடிய நம்பனும், விடை ஏற்றினை விரும்பி ஏறும்
ஈசனும் ஆகிய சிவபிரான் மேவிய ஊர், திருநீறு பூசிய உருவினராய்,
நெஞ்சினில் வஞ்சம் சிறிதும் இன்றித் தெளிவு பெற்ற அடியவர்கள்
சென்று தொழும் சீகாழிப் பதியாகும்.

     கு-ரை: ஏறும் ஏறிய ஈசன்-என்பதிலுள்ள உம்மை ஏற்றின்
அடங்காமையையும் அதை அடக்கிய ஈசன் ஆற்றலையும் குறித்தது.
பசுக்களுக்கு எல்லாம் பதியாதலை உணர்த்துவதே அதன் உண்மைக்
கருத்து. இருந்து அமர்தரும் ஊர் என்றதால் நிலைத்திருக்கையும் மிக்க
விருப்பமும் புலப்படும்.

     7. பொ-ரை: நந்தி மத்தளம் வாசிக்கச் சுடலையில் நடனம்
ஆடிய தலைவனும், விடத்தை விரும்பி உண்டு முன் ஒரு காலத்தில் அறம்
விரித்துச் சனகாதியர்க்கு உரைத்தருளியவனும் ஆகிய சிவ பிரானுக்கு
உகந்த ஊர், விரிந்த மறைகளைப் பயின்ற அந்தணர்கள் வாழ்வதும்
அழகிய பொதிகையில் குடம் அமைந்தது போன்ற உறுப்புக்கள் திகழும்
மணிமாடங்கள் விளங்குவதுமாகிய காழி நகராகும்.