பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)83. திருநல்லூர்1027

3693. கருகுபுரி மிடறர்கரி காடரெரி
       கையதனி லேந்தி
அருகுவரு கரியினுரி யதளர்பட
     வரவரிடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மண நாறமயி
     லாலமர மேறித்
திருகுசின மந்திகனி சிந்தமது
     வார்திருந லூரே.                    4


வீற்றிருந்தருளும் இடமாவது பெருமைமிக்க தாமரை மலர்கள் விளங்கும்
வயல்வளமுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: நீடுவரைமேரு - நெடிய மலையாகியமேரு, (வில்அது ஆக)
நிகழ் - பொருந்திய (நாகம்). நாண் ஆக - (என்பது இசையெச்சம்). அழல்
அம்பால் - (திரிபுரம் எரித்த அம்பின் நுனி நெருப்பு ஆயினபடியால் அழல்
அம்பு எனப்பட்டது.) கூடலர் - பகைவர் (காரணப்பெயர்) ஏடுஉலவு -
இதழ்களையுடைய. சேடு உலவு தாமரை - உயர்வு்பொருந்திய தாமரை.
"பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை" என்றபடி.

     4. பொ-ரை: சிவபெருமான் கருகிய கண்டத்தை உடையவர்,
சுடுகாட்டில் கையில் எரியும் நெருப்பேந்தி நடனமாடுபவர். தம்மைத் தாக்க
வந்த மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர்.
படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்தவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, சோலைகளிலுள்ள நறுமணத்தை நுகர்ந்த
இன்பத்தால் மயில்களாட, அவ்வாடலுக்குப் பொழில் பரிசில் வழங்கிலதே
என்று சினந்தவை போல் குரங்குகள் மரத்திலேறி, மயிலாடுதல் கண்ட
இன்பத்திற்கு ஈடாகப் பரிசு கொடுப்பனபோல் கனிகளை உதிர்க்கக்
கனிச்சாறு பெருகும் திருநல்லூர் எனும் திருத்தலமாம்.

     கு-ரை: கருகுபுரி - கருகுதலையுடைய. (கறுத்த) மிடறர் -
கண்டத்தையுடையவர். காடு - காட்டில், கை அதனில் எரி ஏந்தி. அருகு -
சமீபத்தில். உரி அதளர் - உரித்த தோலையுடையவர். பட அரவர். முருகு -
வாசனை, (மயில்) ஆல - ஆட. திருகுசினம் - மாறுபட்ட கோபம்.
இவ்வாடலுக்குப் பரிசில் வழங்கிலவேயென்று, மரங்களின் மேற் சினந்த
மந்திகள், அம் மரங்களினின்று கனிகளை யுதிர்க்கும் திருநல்லூர் எனச்
சோலைவளம் கூறியவாறு.