பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)100. திருத் தோணிபுரம்1169

3878. தூமரு மாளிகை மாட நீடு
       தோணி புரத்திறையை
மாமறை நான்கினொ டங்க மாறும்
     வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞான
     சம்பந் தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும் வல்லார்
     பார்முழு தாள்பவரே.                 11

திருச்சிற்றம்பலம்


திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை:குண்டிகை; நினைத்த இடத்தில் நீர் பருகற்கு. பீலி; வழியில்
சிற்றுயிர்க்கும் தீங்கு நேராவாறு கூட்டிக்கொண்டு நடப்பதற்கு.தட்டு -
தடுக்கு. உட்காருவதற்கு உபயோகிப்பர். நின்று கோசரங் கொள்ளியர் சமணர்.
கோசரம் - கோ என்னும் பல பொருளொரு சொல். நீரைக் குறித்தது. சரம் -
அந்நீரில் வாழ்வனவாகிய மீன்களைக் குறித்து. மண்டை - ஒருவகை உண்
கலம். மனம் கொள் - விருப்பமாக கஞ்சி ஊணர் புத்தர். வாய்மடிய - பேச்சு
அடங்க. வாய் - கருவியாகுபெயர். தொண்டு - தொண்டர்; சொல்லால்
அஃறிணை. பொருளால் உயர்திணை. வாக்கு மனங்கட்கு அகோசரத்தை
அறியார் என்பதே கருத்துத.

     11.பொ-ரை:தூய்மையான வெண்ணிற மாளிகைகள், மாடங்கள்
நிறைந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
சிவபெருமானைப் போற்றி, நானகு வேதங்களும், அவற்றின் ஆறு
அங்கங்களும் வல்லவனும், தானுண்ட ஞானப் பாலை நாவால் மறித்து
உண்மையான உபதேச மொழிகளாக் நமக்குக் கேள்வி ஞானத்தைப் புகட்டிட
நன்மையைச் செய்கின்றவனுமான திருஞானசம்பந்தன் அருளிய
பாட்டிலக்கணங்க.ள் பொருந்திய இப்பாடல்கள் பத்தினையும் பத்தியுடன் ஓத
வல்லவர்கள் இப்பூவுலகம் முழுவதையும் ஆளும் பேறு பெறுவர்

     கு-ரை:தூமருவு - சுதை தீற்றியதால் வெண்மை நிறம் பொருந்திய,
மாளிகை. நாமரு (வு) கேள்வி - நாவிற்பொருந்திய உபதேசங்களால்
கேள்வி ஞானத்தைப் புகட்டவல்ல ஞானசம்பந்தன். நா என்பது உப
தேசத்தை யுணர்த்தலால் ஆகுபெயர். பா(மருவு) - பாட்டின் இலக்கணம்
அமைந்த. பா - காரிய ஆகுபெயர்.