பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)109. திருக்கயிலாயமும் திருஆனைக்காவும் - திருமயேந்திரமும் திருஆரூரும்1241

3972. சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
  மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூ ரானைக்காவே.            6

3973. கண்ணனு நான்முகன் காண்பரியார்
  வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணலா ரூராதி யானைக்காவே.            7


ஒளிபொருந்திய தனபாரங்களை உடைய உமாதேவியார் தழுவிய. அதியன் -
எவர்க்கும் மேம்பட்டவனாகிய சிவபெருமான். “யாவர்க்கும் மேலாம்
அளவிலாச் சீருடையான்” என்பது திருவாசகம். அதியன், வடசொல்
அடியாகப் பிறந்த பெயர்ப்பகுபதம்.

     6. பொ-ரை: சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும், பிரமனும்
காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான சிவபெருமான்,
திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். அவர்
தக்கனின் தலையை அரிந்தவர். நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை
அணிந்தவர். திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர்.

     கு-ரை: சக்கரம் வேண்டும் மால் - சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற
திருமாலும். காணா - காணப்படாத. மிக்கவர் - யாவரினும் மேம்பட்டவராகிய.
அக்கு அணியவர் - உருத்திராக்கங்களை அணியாகக் கொண்டவர்.

     7. பொ-ரை: கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலைநாதர். எங்கள் தலைவரான
திருவாரூரர். அவர் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும்
திருவானைக்காவிலுள்ள ஆதிமூர்த்தி ஆவார்.

     கு-ரை: கண்ணன் - கரிய நிறத்தையுடைய திருமால். கிருட்டிணன்
என்பதன் சிதைவு.