அருளலும், அஃதாவது
பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவித்தலும் ஞான
நடனம் செய்யும் பேருதவி. இதனைத் தியாகராஜப் பெருமான் செய்கிறார்.
இருநடனத்தையும்
நடராஜப் பெருமானே செய்தருள்கிறார் எனினும்,
ஞான நடனத்திற்கென்று ஒரு தனிமூர்த்தியாகத் தியாகராஜா திகழ்கிறார்.
மூன்றாம்
திருமுறை - முதல் பதிகம்:
ஒன்று,
இரண்டு திருமுறைகளின் முதலில் தொடங்கும் பதிகம்
சீகாழியைப் பற்றியதாகவே பல பதிப்புக்களிலும் பதிப்பித்து உள்ளனர்.
மூன்றாம் திருமுறையில் அவ்வாறின்றி, சிதம்பரப் பதிகமாகிய ஆடினாய்
நறுநெய்யொடு பால்தயிர் என்று தொடங்கும் தில்லைப் பதிகத்தை முதலில்
அமைத்துள்ளனர். இப்பதிப்பிலும் அவ்வண்ணமே பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
ஆடினாய்
என்ற சொல், நெய், பால், தயிரை அபிஷேகப் பொருளாக
ஆட்டிக் கொண்டாய் என்பதோடு, நடனம் ஆடினாய்-அதனால்
உலகுயிர்களை ஈடேற்றம் செய்தாய்-என்ற குறிப்பும் அதில் உள்ளதை
உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
கூத்தப்பிரான்
பஞ்ச கிருத்திய பரமானந்தத் தாண்டவம் ஆடுகிறார்.
ஆடுதற்கு ஏற்ற இடமாக, சிற்றம்பலத்தை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார்.
இக்கருத்தை, சிற்றம்பலம் நாடினாய் என்பதனால் தெளிவுபடுத்துகிறார்
திருஞானசம்பந்தர்.
நடராஜப்
பெருமான் நாடி ஏற்ற இடமாதலின், அது
சந்தானாசாரியருள் ஒரு ஆசிரியருக்குப் பெயராகவே அமைந்து விட்டது.
சித்தர்காடு சிற்றம்பலம் நாடியார் என்ற பெயர் இந்த அடிப்படையிலேயே
அமைந்துள்ளது.
ஆறாதாரத்
தலங்கள்:
மூலாதாரத்
தலம் (மண்) திருவாரூர், சுவாதிட்டானத் தலம் (நீர்)
திருவானைக்கா, மணிபூரகத் தலம் (நெருப்பு) திருஅண்ணாமலை, அனாகதத்
தலம் (ஆகாயம்) சிதம்பரம், விசுக்தித் தலம் (காற்று) திருக்காளத்தி, ஆக்ஞா
தலம் (ஆணைத் தலம்-புருவ மத்தி) ஸ்ரீ காசியாகும்.
|