பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை23

     சுரர்-தேவர்கள். சேக்கிழார் ஓர் இடத்தில் இவ்வந்தணர்களை,
நிலத்தேவர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தணர் நல்லவராய் இருப்பதோடு,
வேள்வி செய்து மழை பெய்யவும் காரணராய் இருப்பர். அந்தணரும்,
வானவரும், ஆனினமும் வாழ்வதால் தண்புனல் வீழும். நல்லவர்கள்
வாழ்ந்து அதனால் மழை பொழியுமானால் வளம் பெருகும். வளம்
பெருகும்போது அவ்வளத்தை ஒப்புரவினால் எல்லோருக்கும் கிடைக்கச்
செய்யவேண்டும். அதற்கு நீதிவேந்தன் ஒருவன் தேவை. அதனைத்தான்
வேந்தனும் ஓங்குக, என்றார் ஞானசம்பந்தர். நல்லரசன் ஆட்சியில் தீயது
ஆழவும், வேந்தன் ஓங்கவும், நல்லோர் நெறியுடன் வாழவும், அரன்நாமம்
உலகெலாம் சூழவேண்டும். அரன்நாமம் சூழ்ந்திருக்குமானால் வையகம் துயர்
தீர்ந்து சுகம் பெறும். இவற்றையெல்லாம் உள்ளடக்கியே, வாழ்க அந்தணர்
எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடலுற்றார் ஞானக் குழந்தை. அப்பாடல்
காண்க.

வாழ்க அந்தணர், வானவர், ஆன்இனம்,
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது, எல்லாம் அரன்நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே

                         (தி.3.ப.54 பா.1)

திருமணம் நடைபெற:

     திருவேதிகுடி என்ற தலம் திருவையாற்றைச் சேர்ந்த சப்தஸ்தானத்
தலங்களுள் ஒன்று. இத்தலத்தின், ‘நீறுவரி யாடரவோடு’ என்ற பதிகத்தில்,
ஏழாம் பாடலில், திருமணம் தடைபடாமல் நடைபெறும் குறிப்பு
காணப்பெறுகிறது. மணங்காண விரும்புவோர், இத்திருப்பதிகத்தை
ஆசாரத்துடன் முறையாக ஓதி, திருமணங்கொண்டு, சிறப்பெய்துவார்களாக.

     “,,,,,,,,,,,,
கன்னியரொ டாடவர்கள் மாமணம்
     விரும்பிஅரு மங்கலமிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையர்
     இயற்றுபதி வேதிகுடியே”

                           (தி.3ப.78 பா.7)

     என்பது அப்பாடற் பகுதி.