பக்கம் எண் :

30ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

அரசர்களாவார்கள் என்கிறது ஞானசம்பந்தர் அருள்வாக்கு. அப்பாடல்
வருமாறு.

முரசதிர்ந் தெழுதரும் முதுகுன்றம் மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீர்உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில்ஆ வாரே

                           (தி.3ப.99பா.1)

     அரசராவது மட்டும் இல்லை. நைவில்லாமல் நாளும் நலமாக
வாழலாம். பழியொடு பகையில்லாமல் வாழலாம். திருவொடு தேசினராகலாம்.
பயன்தலை நிற்பவராகலாம் என்று பாடுவார். வாழ்த்துவார் பயனைப்
பட்டியலிட்டுக் காட்டுகிறார். தோணிபுரப் பதிகப் பாடல் ஒன்றில்
“பாமருபாடல்கள் பத்தும் வல்லார் பார்முழுதாள்பவரே” என்று ஏகச்
சக்கராதிபதியாகவும் வாழலாம் என்று அருளியுள்ளார்.

வீடலாலவாய் விளம்பலூற்றார்:

     விழுமியவர்களாகிய மெய்ஞ்ஞானிகள் வீடுபேற்றையன்றி வேறு
ஒன்றையும் விரும்பாதவர்கள். அப்படிப்பட்டவர்களால் வழிபடப்பெறும்
பண்பாளனே பரமன். பரமனே பண்பாளனாய் வாழ்ந்துகாட்டுவதாக
இப்பாடலை அமைத்துள்ளார் ஞானசம்பந்தர். கடவுள், விழுமியவர்கள்
பாடலையும் முதுகாட்டையுமே விரும்பி உள்ளான். இவனது
திருவிளையாடலால்தான் மூன்று வாதங்கள் நிகழ்ந்தன. மூன்றிலும்
சைவத்திற்கே வெற்றி கிடைத்தது. இதைத் திருவிளையாடலாகச் செய்தார்
என்ற குறிப்பு இப்பாடலில் “குலாயதென்ன கொள்கையே” என்றதனால்
போந்தது.

     மூன்று வாதங்களும் முடிந்துவெற்றியுடன் வருகின்ற ஞானசம்பந்தர்
முதலில் ஆலவாய் அண்ணலைச் சென்று வழிபடுகிறார். அக்காட்சியைச்
சேக்கிழார் பெருமான் விளக்குதல் காண்க.

கைகளும் தலைமீ தேறக் கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடிய னேனை அஞ்சலென்று அருள வல்ல
மெய்யனே என்று வீட லாலவாய் விளம்ப லுற்றார்.

                           (தி.12 திருஞன. புரா. 865)