பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை31

     மன்னன் சமணர்களைக் கழுவேற்றிய நிலையில் சற்றே மனம் மறுகிய
ஞானசம்பந்தர் குற்றம் நீ, குணங்கள் நீ, சுற்றம் நீ, பிரானும் நீ,
தொடர்ந்திலங்கு சோதி நீ, முற்றும் நீயென்று ஆற்றாமையைப்
புலப்படுத்துகிறார். பின்பு “நின்தயங்கி ஆடலே நினைப்பதே நியமமே”
என்று நிறைவுபெறுகிறார்.

குரவப் பொழில்:

     குராமலர் இறைவனுக்குச் சூட்டக்கூடிய நன்மணம் மிக்க மலராகும்.
இக்குரா மரம் சோழநாட்டில் காவிரிக்கரை இருமருங்கும் இருந்ததாகத்
தேவாரம் முதலிய இலக்கியங்களால் அறிகிறோம். இப்போது முருகன்
தலமாகிய திருவிடைக்கழி என்னும் தலத்தில்தான் தலவிருட்சமாகக்
காண்கிறோம். மற்ற இடங்களில் காண இயலவில்லை.

     கும்பகோணத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளியபோது. “குரவிரி
சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு” என்றருளினார். ஆடு துறை என
வழங்கும் தென்குரங்காடுதுறையைப் பரவும்போது சம்பந்தர், “பரவக்கெடும்”
என்று தொடங்கும் பதிகத்தில் ‘குரவப்பொழில் சூழ் குரங்காடு துறையே’
என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விரு தலங்களும் காவிரித் தென்கரைத்
தலங்கள். குடந்தைக்கு நேர் காவிரியின் வடபால் உள்ளது திருவியலூர்.
‘குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை’ என்று அத்தலத்து அம்பிகையைப்
போற்றியுள்ளார்.

     குமரகுருபரரும் தமது முத்துக்குமாரசாமிப் பிள்ளைத் தமிழில்,
“குரவுகமழ்தரு கந்தபுரியில் அருள்குடி கொண்ட குமரகுருபரன் வருகவே”
என்று குறிப்பிட்டுள்ளார். இம்மரம் திருவிடைக்கழியில் மட்டுமே உள்ளது.
வனத் துறை இதனைக் கவனிப்பதாகுக.

புவியதனில் பிரபு:

     வாக்கிற்கு அருணகிரி என்றும், தாக்கிற்குத் திருஞான சம்பந்தர்
என்றும் ஒரு பாடல் கூறுகிறது. தாளக்கட்டமைந்த பாடலுக்கு முதல்வர்
திருஞானசம்பந்தரே. அதனைப் பலவகையாக வளர்த்தவர் அருணகிரியார்.
இதனைத் திருப்புகழில் நன்கு காணலாம். “புவியதனில் பிரபுவான புகலியில்
வித்தகர் போல அமிர்த கவித்தொடை பாட அடிமைதனக்கருள்வாயே”
என்பது அருணகிரியார் வாக்கு. ஞானசம்பந்தரைப்போல் பாடவேண்டு
மென்று முருகப்பெருமானை வேண்டியவர். ஞானக்குழந்தையைப்