பக்கம் எண் :

32ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

போலவே திருப்புகழ் பாடினார். “நிராமய பராபரபுராதன பராவுசிவராக
அருள்’ என்பது ஞானசம்பந்தர் வாக்கு. அதனை அப்படியே ‘நிராமய
புராதன பராபரவராம்ருத நிராகுல இராசித’ என்று பாடியுள்ளார்
அருணகிரியார்.

     மேலும் ஞானசம்பந்தர், சுரருலகு எனத்தொடங்கும் பதிகம் 12
பாடல்களிலும் சீகாழி பற்றிய 12 பெயர்களைக் குறித்துப் பாடியுள்ளமையும்,
சுரருலகு என்ற பாடலைக் குற்றெழுத்துக்களைக் கொண்டே
பாடியுள்ளமையும், கடைசிப்பாடலில், ஒழுகலரி தழிகலியின் உழியுலகு
பழிபெருகு வழியை நினையார், என்று ழகர எழுத்துக்கள் மிகுதியாக
வருமாறு பாடியுள்ளதையும் கண்டு மகிழலாம், இவையெல்லாம்
அருணகிரியாருக்கு வழிகாட்டியாகும்.

ஆணை நமதே:

     இரண்டாம் திருமுறையில், “காரைகள் கூகை முல்லை” (தி.2ப.84 பா.1)
என்ற திருப்பதிகக் கடைசிப் பாடலிலும், “வேயுறு தோளிபங்கன்” (தி.2 ப.85
பா.1) என்ற திருப்பதிகக் கடைசிப்பாடலிலும் ஆணை நமதே என்று அருளிய
ஞானசம்பந்தர், மூன்றாந் திருமுறையில் திருவெண்காட்டுத் திருப்பதிகத்து
இறுதிப்பாடலில் “ஆணையே” என்றும், வேதிகுடித் திருப்பதிகத்து
இறுதிப்பாடலில் “ஆணை நமதே” என்றும், “மடன்மலி கொன்றை” (தி.3
ப.118.பா.1) என்ற பதிகத்து இறுதிப் பாடலில் “வானிடை வாழ்வார்,
மண்மிசைப் பிறவார் மற்றிதற்காணையும் நமதே” என்றும், ஆக
ஐந்திடங்களில் “ஆணை நமதே” என்று அருளியுள்ளமை கண்டு
தெளியலாம்.

வாது செய்யத் திருவுள்ளமோ:

     பாண்டிய மன்னன் வெப்பு நோயால் வாடியபோது அந்நோய் தீர்க்க
அரசன் அநுமதி பெற்று, மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும்
ஞானசம்பந்தரை அழைத்தபோது “ஆலவாய் அண்ணல் திருவுளம்
அறிவேன்” என்று ஆலவாய்க்கோயில் சென்று, “நோக்கிட விதியிலாரை
நோக்கி யான் வாது செய்யத் தீக்கனல் மேனியானே திருவுள்ளமோ” என்று
வினவிப் பிரார்த்தனை செய்தும் தெளிவுபெறாமையால், மற்றொரு முறையும்
திருக்கோயில் சென்று “வேத வேள்வி” பதிகம் பாடித் திருவுள்ளம் அறிந்தே
அரசமாளிகை சேர்ந்து, வெப்புநோய் அகற்றினார். மேலும் அனல் வாதம்,
புனல் வாதத்தில் வென்று சைவ சமயமே சமயம் என்று சமய ஸ்தாபனம்
செய்தார்.