3100. |
கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன் |
|
வெங்கண்வாள்
அரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்உமை யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே. 5 |
3101. |
பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும் |
|
காலனார்
உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழ பாடியே.
6 |
5.
பொ-ரை: கங்கையைத் தாங்கிய சடைமுடியின் இடையில்
ஒளிரும் சந்திரனை அணிந்தவன் சிவபெருமான். கொடிய கண்ணையுடைய
ஒளியுடைய பாம்பை ஆபரணமாக அணிந்தவன். வேதத்தை அருளி
வேதப்பொருளாகவும் விளங்குபவன். தன்னை வழிபடுபவர்களின்
தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த கண்ணையுடைய உமா
தேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் மங்கையர்கள் நடம்
பயின்று விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
வாள் அரவு - ஒளியையுடைய பாம்பு. வாள் என்னும் சொல்
பாம்புக்கு அடைமொழியாக வருவதைப் பல இடங்களிலும் காண்க. தீது
இலா உமையாள் -தன்னையடைந்தவர்களின் பாவத்தை இல்லையாகச்
செய்விப்பவளாகிய உமையாள். இலா என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சத்துப் பிறவினை விகுதி தொக்கது.
6.
பொ-ரை: பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும்
அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர் அழியும்படி அவனைக்
காலால் உதைத்த சிவபெருமான், சேல்மீன் போன்ற கண்களையுடைய
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருமால் முதலான
பெருமையுடையவர்கள் வழிபடும் சிறப்புமிக்க திருமழபாடி என்னும்
திருத்தலம் ஆகும்.
கு-ரை:பாலனார்-மார்க்கண்டேயர்.
பாங்கினால்:-அளந்த வாழ்நாள்
முடிந்தவர் உயிரைக்கவரத் தனக்கு இறைவன் அளித்த ஆளை இங்குப்,
பாங்கு எனப்பட்டது. செக-அழிய. காலன் ஆகையினால் அவனைக்
காலினாற் சாடினான் என்பது ஓர் சொல்நயம். சேல்-மீன். மாலினார்-திருமால்.
இறைவனை வழிபடும் பேறு உற்றமையின் மாலினார் எனச்சிறப்புக் கிளவியாற்
கூறினார்.
|