பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)49. பொது717

49.பொது

பதிக வரலாறு:

     சிவன் அமர்ந்து உறையும் நல்லூர்த் திருப்பெருமணத்தை. ‘நங்கள்
வாழ்வு’ எனவரும் திருஞானசம்பந்தர் நண்ணினார். நம்பாண்டார் நம்பி
திருமகளைப் பெருமணம் புரிய இசைந்தார். மண்ணவரும் விண்ணவரும்
பண்ணவரும் யாவரும் திருமணம் காணவந்தனர். மணமக்களைக் கண்
இமையாமல் வாழ்த்தியதால் மனிதரும் தேவராகத் திகழ்ந்தனர். தவ நெறி
வளர்க்கவந்த பிள்ளையார்க்கு ‘என்னை முன்னாள் ஆண்ட அப்பண்புகூட
மலர்ப்பாதம் காட்டும்’ என்னும் நல்லுணர்வு நண்ணிற்று. திருமணத்தைக்
கண்டோர்க்கும் தீதுறு பிறவிப்பாசம் தீர்த்தல் செம்பொருளாகக் கொண்டார்.
‘கொண்டு நாதனே! நல்லூர்ப் பெருமண நம்பனே! உன் பாத மெய்ந்நிழல்
சேரும் பருவம் ஈது’ என்று பாடியருளியது இக் காதல் மெய்ப்பதிகம்.

நமச்சிவாயத் திருப்பதிகம்
பண்: கௌசிகம்

ப.தொ.எண்:307   பதிக எண்: 49

திருச்சிற்றம்பலம்

3320. காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
  ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.            1


     1. பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி
தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும்,
நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும்,
அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற
திருவைந்தெழுத்தாகும்.

     கு-ரை: காதல் - அன்பு. மல்கி - மிக்கு. ஓதுதல் - சொல்லுதல்.
இங்கே செபித்தல் என்னும் பொருளில் வந்தது.