பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)52. திருஆலவாய்741

3358. தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறும்
  கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனு மாலுநின்
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.       9

3359. தேற்றமில் வினைத்தொழிற் றேரருஞ் சமணரும்
  போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.     10


     9. பொ-ரை: தாவிச் செல்லும்இடபத்தை வாகனமாக உடையவரே!
தலைமை உடையவராய் நாடொறும் கோவண ஆடையோடு கூடல்
ஆலவாயில் வீற்றிருந்து அருள் செய்பவரே! நெருப்புப் போன்று செந்நிறமான
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், உம் முழுமுதல்
தன்மையை அறியாதவர்களாய்க் கலக்கம் உற்றார்கள்.

     கு-ரை: தாவண்ணம் - தாவும் தன்மை. தீவணம் மலர் - செந்தாமரை
மலருக்குத் தீவணம் நிறத்தால் உவமை. “எரியாத தாமரை மேல்
இயங்கினாலும்” (அப்பர்) “எரியகைந்ததன்ன தாமரை நாப்பண்” எனவரும்
புறநானூற்றாலும் அறிக.

     தூவணம் - பற்றுக் கோடாம் தன்மை. (புறம்)

     10. பொ-ரை: தெளிவில்லாத செயல்களைச் செய்யும் புத்தரும்,
சமணரும் உம் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியங்களைத்
தேடிக்கொள்ளாதவராயினர். காலனை மார்க்கண்டேயர்க்காக உதைத்த
திருவடிகளை உடையவரே! கூடல் ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே!
உலகனைத்திற்கும் தலைவராக விளங்கி உயிர்கட்கு எல்லா நன்மையும்
தருபவர் நீவிர் அல்லிரோ?

     கு-ரை: நால்திசை - அன்மொழித் தொகையாய் உலகம் என்னும்
பொருளிலும், மூர்த்தி என்பது கடவுள் என்னும் பொருளிலும் வந்தன.
“உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே”. (தி.6.ப.38.பா.1)