பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)66. திருவேட்டக்குடி853

3511. அருமறைநான் முகத்தானு
       மகலிடநீ ரேற்றானும்
இருவருமா யளப்பரிய
     வெரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி
     மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார்
     திருவேட்டக் குடியாரே.              9


     கு-ரை: துறை - துறையில். உலவு - உலாவுகின்ற. கடல் ஓதம் - கடல்
அலைகள். சுரிசங்கம் - சுரிந்த சங்குகளை. இடறி - வீச; போய் - (அவை)
சென்று. நறையுலவும் - நறுமணம் வீசும். பொழில் - சோலையிலுள்ள,
புன்னை, (நல் நீழல்கீழ்.) அமரும் - தங்கும். இறைபயிலும் - (இலங்கைக்கு)
அரசனாகப் பொருந்திய இராவணன். திறல் - வலிமை.

     9. பொ-ரை: அரிய நால்வேதங்களையும் கற்ற பிரமனும், மாவலிச்
சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டி நீர் ஏற்ற திருமாலும் ஆகிய
இருவரும் அளந்தறிய முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர்
சிவபெருமான். பெருக்கெடுத்துவரும் காவிரியாற்றின், வீசுகின்ற அலைகள்
மணிகளை உந்தித் தள்ளிச் சேர்க்கும் வளமிகுந்த திருவேட்டக்குடி என்னும்
திருத்தலத்தில், சுடர்விடும் பவளம் போன்ற தம் திருமேனியில்
திருவெண்ணீறு பூசப் பெற்றவராய், சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: அரு மறை - அரிய வேதங்களை வல்ல. நான் முகத்தானும்
- பிரமனும். அகல் இடம் - அகன்ற இடத்தையுடைய இப்பூமியை. நீரால் -
நீரினால், ஏற்றானும் - (மாவலியினிடம்) யாசித்தவனும். அளப்பு அரிய -
அளவிடற்கு அரிய. நான்கு முகத்தானும் வேதங்களை வல்லவன். தன்
கலையறிவினாலும், உலகம் அளந்தவன் தன் உடல் வலியினாலும்
இருவருமாய்க் காணமுடியாத எனஒரு நயம். எரி உருவாய் - அழல் வடிவாய்
(நீண்ட.) நீர் ஏற்றல் - தத்தம் பண்ண வாங்குதல். மறி - மடக்கி. வீசுகின்ற.
திரை - அலைகள். புனலின் - நீரினால் மணி முத்துக்களை. உந்தி - தள்ளி.
ஆர் - நிறைந்த. சுடர்ப்பவளம் - ஒளியையுடைய பவளம் போலும். திரு
உருவில் - அழகிய உடம்பில். வெண்நீற்றார் - வெள்ளிய திருநீற்றைப்
பூசியவர். இது சிவபெருமானது கோலம்.