பக்கம் எண் :

888திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3547. காடதிட மாகநட மாடுசிவன்
       மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைக ணீடுவளர்
     கொச்சைவய மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம்
     பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்க
     ணல்லர்பர லோகமெளிதே.         11

திருச்சிற்றம்பலம்


கல்யாண குணங்களை, அறியாதவகை - தெரியாத விதம்; நின்ற -
அவர்களை மறைத்து நின்ற. (சிவன் மேவும் மலையை) நாடி - ஆராய்ந்து,
வினவில் - கேட்பீர்களே யானால், பிடி - பெண் யானைகள்; குன்றில் -
மலையில், துன்று - நெருங்கிய, சந்தின் முறி - சந்தனத் தழைகளை,
கன்றினொடு தின்று - தமது கன்றினுடனே தின்று, குலவி - மகிழ்ந்து
திரிந்து, விளையாடுகின்ற காளத்திமலை, கையர் - அற்பர் என இரு
பொருளும் கொள்க. மலைவளம் கூறியது: தன்மை நவிற்சியணி.

     11. பொ-ரை:சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி,
மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்தள்ள கொச்சைவயம் என்னும்
சீகாழியின் நிலைபெற்ற தலைவனும், பலநாடுகளிலும் பரவிய
புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய
இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர்.
அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும்.

     கு-ரை: காடு (அது) மயானம், இடமாக - அரங்காக, நடம் ஆடு
- கூத்தாடுகின்ற சிவன், நீடுவளர் - மிக உயர்ந்த: கொச்சை வயம் -
சீகாழியில், மன்னு - நிலைபெற்ற தலைவனாகிய: நாடுபல - பல நாடுகளிலும்,
நீடு புகழ் - சென்று பரவிய, புகழையுடைய, (ஞான சம்பந்தன்) உரை -
பாடிய. பாடலொடு பாடும் இசை - பாடலொடு இசைத்தப் பாடும் இசையில்
வல்லவர்கள். நல்லர் - சிறந்தவர்கள் ஆவார்கள்.(அவர்களுக்கு) பரலோகம்
- சிவலோகம். எளிது - அடைவதற்கு எளிதாகும். பிறர் அடைவதற்கு
அரியதாயினும் என்பது இசையெச்சம்.