ஆளுடைய
பிள்ளையார் திருவுலா மாலை
மாதவத்தோர்
வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் - ஆதியாம்
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் - துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய
சிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன
வந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில்சீர்
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறையவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
தத்துவனை நித்தனைச் சைவத்தவர் அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை - முத்தமிழின்
செஞ்சொற்பொருள் பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர்
அஞ்சத் திகழ்ந்த அடல்உருமை - எஞ்சாமை
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலிற்
கோதில் அமிர்தம்நுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத்
திருஞானசம்பந்தன் என்றுலகஞ் சேர்ந்த
ஒருநாமத் தால்உயர்ந்த கோவை.
-
நம்பியாண்டார் நம்பி.
|