சோழன், இரண்டாம் இராஜாதிராஜன் என்பவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னர்களுள் மாறபன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் விக்கிரமபாண்டியதேவர், ஜடாவர்மன் சுந்தரபாண்டியதேவர், திரிபுவன சக்கரவர்த்தி வல்லபதேவர் என்பவர்கள் காலங்களிலும், கேரளவம்சத்தில் இரவிவர்ம மகாராசராகிய குலசேகரதேவர் காலத்திலும், சாளுவவம்சத்தில் மகா மண்டலேசுவரரான நரசிங்க தேவமகாராயர் காலத்திலும், விசய நகர மன்னர்களுள் (பொக்கண்ண உடையார் மகன்) கம்பண்ண உடையார், அச்சுததேவ மகாராயர், ஸ்ரீரங்கதேவ மகாராயர், சதாசிவதேவ மகாராயர் என்பவர்கள் காலங்களிலும், தஞ்சை நாயக்க மன்னருள்சின்னப்ப நாயக்கர் காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஊரின் பெயர்: நிருபதுங்கப்பல்லவர் காலத்தில் இவ்வூர் அதியரைய மங்கலம் என்றும், முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில் அதிராஜமங்கலம் என்றும், முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் அதிராசமங்கலியபுரம் என்றும், மணவிற் கூத்தனான காலிங்கராயனின் திருப்பணிகளைப்பற்றிக் கூறும் பாடல்களில் அதிகை என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. இறைவர் திருப்பெயர்: இக் கல்வெட்டுக்களில் இறைவர் திருவீரட்டானமகாதேவர், திருவீரட்டானமுடையார், திரு வீரட்டானமுடையநாயனார், அதிகை நாயகர் என்னும் திருப்பெயர்களால் வழங்கப்பெற்றுள்ளனர். இறைவியார் பாராட்டப்பெறும்விதம்: இக் கோயில் கல்வெட்டுப் பாடலில் இறைவியார் “அதிகை வீரட்டத்து ஈசன் இடமருங்கில் ஏந்திழை”, “அண்ணல் அதிகையான் ஆகம் பிரியாத பெண்ணின் நல்லாள்” என்னும் தொடர்களால் பாராட்டப்பெற்றுள்ளனர். திருக்கோயிலைப்புதுக்கியவர்: திருவீரட்டானமுடையார் கோயிலை நிருபதுங்கதேவரின் பதின்மூன்றாமாண்டில் புதுப்பித்தவர் முனைப்பாடி ஆமூர்ப் பெருங்குளத்தில் வாழ்ந்துவந்த முனைப் பேரரையர்மகன் முனையகோன்.
|