திருநாவுக்கரசர் திருவீதி என்று பெயர்வைத்துள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் அகோராஷ்டிர நயினார் திருமடம்: இவ்வூரில் இப்பெயருள்ள மடம் ஒன்றும் இருந்தது. இதற்கு மடப்புறமாக அதியமங்கலத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்ட தென்னம்பட்டில் நிலத்தை வாங்கி அளித்தவர் ஈசுவரநாயக்கருடைய பிரதிநிதியாகிய காமக்கோக்கிழாரான அறம்வளர்த்த நாயனார் ஆவர். இது நிகழ்ந்த காலம் சகம் 1400. அதாவது கி.பி. 1478ஆகும். இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு: இவ்வூர்; முதலாம் இராஜேந்திரசோழன் கல்வெட்டில் சயங்கொண்ட சோழமண்டலத்து, திருமுனைப்பாடிநாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும்; முதற் குலோத்துங்கசோழன் கல்வெட்டில் கங்கை கொண்ட வளநாட்டுத் திருமுனைப்பாடி ஆமூர்நாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும்; இம் மன்னனுடைய 46ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில், கங்கைகொண்ட சோழவளநாட்டுத் திருமுனைப்பாடிக் கீழாமூர் நாட்டு அதிராசமங்கல்யபுரம் என்றும்; “பூமேவி வளர்பொன்மாது புணர” எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய இரண்டாங் குலோத்துங்க சோழ தேவரின் 13ஆவது ஆண்டுக் கல்வெட்டில், இராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடிக் கீழாமூர் நாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும், சகல புவனச் சக்கவர்த்தி கோப்பெருஞ்சிங்க தேவரின் மூன்றாமாண்டுக் கல்வெட்டில் இராஜாதிராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடிக்கீழாமூர் நாட்டு அதிராசமங்கல்யபுரம் என்று குறிக்கப்பெற்றுள்ளது. இங்குக் குறித்த திருமுனைப்பாடி நாடுதான், அறந்தரு நாவுக்கரசரையும் ஆலாலசுந்தரரையும் தோற்றுவித்த நாடாகும். இங்குக் குறித்த திருவாமூரே, “சைவநெறி தலமேழும் பாலிக்குந் தன்மையினால் | தெய்வநெறிச் சிவம்பெருக்கும் திருவாமூர் திருவாமூர்” |
எனச் சேக்கிழார் பெருமானால் பாராட்டப்பெற்ற,அப்பர் பெருமான் பிறந்த பதியாகும்.
|