மேற்கும், சத்திய பாவை என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்குத் தெற்கும் ஆக இந்நடுவுட்பட்ட ஒரு வேலி கொல்லை நிலத்தை, சோழ மண்டலத்து இராசநாராயண வளநாட்டு விளைநாட்டு அரசூர் சிவப்பிராமணன் பாலாசிரியனான கோழம்ப நாயகன் திருத்திக் கொடுத்துள்ளான். திருவீரட்டானமுடையார் திரு அர்த்தசாமத்துத் திருப்பள்ளிக்கட்டில் ஏறி அருளினால் அமுது செய்தருள அமுதுபடி, வெஞ்சனத்துக்குக் காலிங்கராயன் தன் பெயரால் கட்டின காலிங்கராயன் சந்திக்கு உத்திபற்றில் அதியனூர்பால் காலணை என்னும் நிலத்தைத் திரிபுவனச் சக்கிரவர்த்தி ஸ்ரீ வல்லபதேவ பாண்டியரின் 33ஆம் ஆண்டில் கொடுத்துள்ளான். இக்கல்வெட்டில் கண்டதூய தமிழ்ச்சொல்: “இதன் பலிசையால் இரண்டு நந்தாவிளக்குக்கு நாள்வாய் உரிநெய் அளந்து கொடுப்போமானோம் திருக்கோயிலுடையார் கையிலே நகரத்தோம். இவ்விளக்கு நந்தில் பன்மாகேஸ்வரர் கடை கூட்டப்பெற்றார்” என்னும் பல்லவ அரசனாகிய நிருபதுங்க வர்மன் காலத்துக் கல்வெட்டுப் பகுதியாலும்; “இதன் பலிசையால் யாண்டு பத்தாவது முதலாக நாள்வாய் நாழிநெய் அளந்துகொடுத்து இரண்டு நந்தாவிளக்கு எரிப்பேனானேன்” - என்னும் தெள்ளாறெறிந்த நந்தி போத்தரையர் காலத்துக் கல்வெட்டுப் பகுதியாலும் நாள்வாய் என்னும் தூய தமிழ்ச் சொல் கிடைத்துள்ளது. இச்சொல் இக்காலத்தில் வழக்கத்தில் அருகியுள்ளது. கல்வெட்டுக்களில் பெரும்பான்மையும் நிசதம் என்ற வடசொல்தான் காணப்படுகிறது. நிசதம் என்பதற்கு நாடோறும் என்பது பொருள். நிசதம் என்பதற்கு முற்காலப் பல்லவர் காலங்களில் நாள்வாய் என்ற தமிழ்ச்சொல் இருந்தது கண்டு மகிழ்தற்கு உரியதாகும். முட்டில் (தடைப்படில்) என்றபொருளில் நந்தில் என்ற சொல் வழங்கியிருப்பதும் நோக்கத்தகும். (‘நந்தல் கேடுடனே ஆக்கம்’ என்பது நிகண்டு). “மானம் நந்தலனாகி மனுநெறி போனதண் குடைவேந்தன் புகழென” என்னும் கம்பராமாயண ஆற்றுப்படல அடிகளில் நந்தலனாகி = கெடாதவனாகி என்ற பொருளில் இருப்பதையும் காணலாம்.
|