என்பது சுந்தரர் சொல்மாலை. காலைக்காட்டி மணிவாசகரை ஆட்கொண்டார். “இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே, துணையான சுற்றங்கள் அத்தனையும துறந்தொழிந்தேன்”என்பது மணிவாசகர் மணிமொழி. இந்நால்வரும் சைவசமய ஆசாரியர்களாவர். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அவரவர் தன்மைக்கு ஏற்ப ஆட்கொண்டுள்ளார். “ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான்புகில் அளவில்லை கிளக்கவேண்டா” என்பது ஞானசம்பந்தரின் நல்வாக்கு. ஞானசம்பந்தர் வாழ்வில் துன்பமே இல்லாத நிலையைக்காணமுடிகிறது. நாவுக்கரசர் வாழ்வில் அடிமுதல் முடிவுவரை துன்பங்கலந்த நிலையையே காண்கிறோம். “என்னை வகுத்திலனேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே” என்பது அப்பர் அநுபவ வாக்கு. சுந்தரர் வாழ்வில் துன்பமும் இன்பமும் கலந்தே நடையிடுகிறது. “பாடிய அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே” என்பதும், “கஸ்தூரி கமழ் சாந்தும் பணித்தருள வேண்டும்” என்பதும் சுந்தரர் அநுபவ அருள்மொழி. மணிவாசகர் வாழ்வில் முன்னர் இன்பமும் பின்னர்த் துன்பமும் கலந்துவருவதைக் காண்கிறோம். “இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்பது மணிவாசகரின் மணிமொழிச்சான்று. அறக்கருணை, மறக்கருணை: இறையருள் காட்டுகின்ற நன்னெறியிற் செல்வோரை அறக்கருணைகாட்டி ஆட்கொள்கின்றான் சிவபெருமான். அந்நெறி வழுவுவோரை மறக்கருணைகாட்டி ஆட்கொள்கின்றான். அறக்கருணை காட்டி ஆளும்திறத்தை ஆளுடைய பிள்ளை வாழ்வில் காணமுடிகிறது. மறக்கருணை காட்டி ஆளும் திறத்தை மற்ற மூவர் வாழ்விலும் கண்டு தெளிகின்றோம். இதனை அப்பர் வாக்காலும் அருணந்தி சிவத்தின் அருள் மொழியாலும் நன்குணரலாம்.
|