ஒதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே | காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப் | போதுவித் தாய்நின் பணிபிழைக் கில்புளி யம்வளாரால் | மோதுவிப் பாய்உகப்பாய் முனி வாய்கச்சி யேகம்பனே | -தி.4 ப.99 பா.1 |
என்பது அப்பர் அருள்வாக்கு. “வளாரினால் அடித்துத் தீயபந்தமும் இடுவர் பார்த்திடில் பரிவேயாகும்” என்பது அருணந்தி சிவத்தின் சித்தியார்வாக்கு. சொன்னதைக்கேட்டு அதன்படி நடப்போர்க்கு நலம் செய்வது அறக்கருணை எனப்படும். சொன்னதைக் கேட்டு அதன்படி நடவாதாரை அவரவர் தன்மைக்கேற்ப இடர் கொடுத்து அவ்விடரால் அவர்களை நன்னெறிப்படுத்தி நலம் செய்வது மறக்கருணை எனப்படும். இவர்கள் அறக்கருணை வழியாலும், மறக்கருணை வழியாலும் ஆட்கொள்ளப் பெற்றவர்களாயினும் நம்பெருமக்கள் நால்வரும் நந்தமக்கெல்லாம் நல்லாசாரியர்களேயாவர். அவர்தம் முடிவான வாழ்க்கை நம்மனோர்க்கெல்லாம் எடுத்துக்காட்டான வழிகாட்டியாகும். திருவதிகை - திருப்பணிக் குறிப்பு: அறம்தரும் நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் பிறந்தருளிய பெருமைக்குரியது திருமுனைப்பாடி நாடு. முனை அரையர்கள் ஆட்சி செய்தமையால் முனைப்பாடி நாடு எனப் பெயர்பெற்றது. இதுவே நடுநாடு என்றும் பேசப்பெறுகிறது. இது தொண்டை நாட்டிற்கும்சோழ நாட்டிற்கும் நடுவே இருப்பதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். முனை அரையர், போர்முனையில் பேரரசர்களுக்குத் தளபதியாக இருந்து வெற்றி தேடித் தந்தமையால் இப்பெயர் பெற்றவராகக் கொள்ளலாம். முனையரையர்கள் ஆட்சி செய்த முனைப்பாடி நாட்டில் பெருந்தலமாக விளங்குவது திருவதிகை வீரட்டானம் ஆகும். சுந்தரரைக் காதல் மகவாகப் பெற்று இப்பகுதியை ஆட்சி செய்த நரசிங்க முனையரையர் இதற்குச் சான்றாகத் திகழ்கிறார். இத்தலம், நிருபதுங்க பல்லவமன்னன் காலத்தில் அதிஅரைய மங்கலம் என்றும், முதலாம் இராசேந்திரன் காலத்தில் அதிராசமங்கலம் என்றும். முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் அதிராசமங்கலியபுரம்
|