சூழப்பட்டிருந்தமை அறியலாம். இவ்வூர் முதல் இராஜராஜன் காலத்தில் க்ஷத்திரியசிகாமணி வளநாடு என்றும் மும்முடிச்சோழ வளநாடு என்றும் முதற்குலோத்துங்கன் காலத்திலும் அதற்குப்பின்பும் குலோத்துங்க சோழவள நாட்டைச் சார்ந்ததெனவும் கூறப்பெறுகிறது. இது பனையூர்நாட்டுப் பிரமதேயமான திருப்புகலூர் என வழங்கப்பெறுகிறது. இறைவன் கோணப்பெருமான் என்று குறிப்பிடப்பெறுகிறார். இங்குள்ள அம்பிகை நம்பிராட்டியார் என வழங்கப்பெறுகிறார். இராஜராஜன் காலத்தில் அம்மைக்கு நிவந்தங்கள் அளிக்கப்பெற்றன. திருநாவுக்கரசு நாயனார் குளிச்செழுந்த நாயனார் எனக் குறிக்கப்பெறுகிறார். இவருக்கு இராஜராஜன் காலத்தில் நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருக்கிறது. முருகநாயனார் திருமடம் நம்பிநாயனார் திருமடம் என்றும் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தருமபுரத்து நாயனார் யாழ்மூரி நாயனார்என்றும் திருநீலநக்க நாயனாரை நக்கநாயனார் என்றும், கல்வெட்டுகள் காட்டுகின்றன. 44. திருப்பூந்துருத்தி இத் தலம் தஞ்சை மாவட்டத்தில்திருக்கண்டியூருக்கு மேற்கே 3. கி.மீ. தொலைவிலுள்ளது. சோழ மன்னன் துருத்தியை வைத்துப் பூசிக்கச் செய்ததனால் திருப்பூந்துருத்தி என்று பெயர் வந்ததென்று கூறுவர். ஆற்றிடைக் குறையில் உள்ள பகுதியைத் துருத்தி என வழங்குவது உண்டு. இது திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. இறைவர்: புஷ்பவனநாதர். இறைவி: அழகார்ந்தநாயகி; சுந்தரநாயகி. இங்குத் திருஞானசம்பந்தப் பெருமான் இறைவனை வழிபடுவான் வேண்டி இவ்வாலய நந்திகள்விலகியனவாகக் கூறுவர். இத் தலம் தேவேந்திரன் காசிப முனிவர் சோழன் முதலானோர் பூசித்த பெருமையுடையதாகும். இது திருநாவுக்கரசு பெருந்தகையார் திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு எழுந்தருளியிருந்து
|