பக்கம் எண் :

255
 

பல்வகைத் தாண்டகங்களையும் திருவங்கமாலையுள்ளிட்ட பல பதிகங்களையும் அருளிய பெருந்தலமாகும்.

இத் தலத்தில் இவ்வாறு அப்பர் பெருமான் இருந்தபோது பாண்டிநாட்டிற்குச் சென்று வல்லமணரை வாதில் வென்று தென்னவன் கூன் நிமிரித்தருளித் திருநீற்றின் ஒளி பரப்பித் திரும்பி வந்து திருப்பூந்துருத்தியை அடைந்தார். அதுபோது அவருடைய முத்துச் சிவிகையினை ஒருவரும் அறியாது தாங்குவாருடன் தாங்கிவந்து சம்பந்தர் ‘எங்குற்றார் அப்ப’ரெனக் கேட்டபோது ‘அடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பேறு பெற்றிங்குற்றேன்’என்று அப்பர் பெருமான் கூறியதும் ஞானசம்பந்தர் சிவிகையினின்றும் இறங்கி இருவரும் வணங்கி அளவளாவிச்சில காலம் தங்கியிருந்த திருத்தலமாகும். இதற்குத் திருப்பதிகங்கள் மூன்று உள்ளன.

45. திருப்பெருவேளூர்

இவ்வூர் காட்டூர் ஐயன்பேட்டை என்று வழங்கப் பெற்று வருகின்றது. இது திருவாரூர்க்கு மேற்கே 11. கி.மீ. தூரத்திலுள்ள திருக்கரவீரத்திற்குவடமேற்கே 2. கி.மீ தூரத்தில் இருக்கின்றது.

இறைவரின் திருப்பெயர் - பிரியநாதர். இறைவியின் திருப்பெயர் - ஏலவார்குழலி. கௌதமர் வழிபட்டுப் பேறுபெற்றதலம். இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன இறைவரின் திருப்பெயர் பிரியார் எனச் சம்பந்தர் பதிகத்திலும் பேணினான் என அப்பர் பதிகத்திலும் காணப்படுகிறது.

46. திருமறைக்காடு

மறைகள் பூசித்த காரணம்பற்றி இப்பெயர்பெற்றது. இச்செய்தி “சதுரம் மறைதான் துதி செய்து வணங்கு மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறைமைந்தா” என்னும் திருஞானசம்பந்தரது இத்தலத் தேவாரப்பகுதியால் (பண்- இந்தளம். திருப்பாட்டு 1) விளங்குகின்றது.

திருத்துறைப்பூண்டி வேதாரணியம் தொடர்வண்டிப் பாதையில் வேதாரணியம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 3/4 கி.மீ.