பக்கம் எண் :

256
 

தூரத்தில் இருக்கின்றது. திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவரின் திருப்பெயர் மறைக்காட்டுமணாளர். இத் திருப்பெயர் இவ்வூர்க்குரிய அப்பர் பெருமானின் “மறைக் காட்டுறையும் மணாளன் றானே”என்னும் திருத்தாண்டகத்தால் அறியக் கிடக்கிறது. வேதாரண்யேசுவரர் என்னும் பெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் யாழைப்பழித்தமொழியம்மை. இத்திருப்பெயரைச் சுந்தரமூர்த்திநாயனார் இவ்வூர்ப் பதிகத்தில்முதலாம் திருப்பாட்டில் “யாழைப்பழித்தன்ன மொழிமங்கை யொரு பங்கன்” என எடுத்தாண்டுள்ளார்.

தீர்த்தம்: வேததீர்த்தம் கடல்துறை மணிகர்ணிகை தேவபூடணம் என்பன.

தலவிருட்சம் வன்னி.

பார்வதிதேவியாரின் திருமணத்தின் பொருட்டுத் தேவரும் பிறரும் கூடிய கூட்டத்தின் காரணமாக வடதிசை உயர்ந்து, தென்திசை தாழ்ந்தது. அதைச் சமன்செய்யச் சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினார். பெருமானது மணக் கோலத்தைக்காண முடியாதுபோவது பற்றிஅகத்தியர் வருந்தினார். அப்பொழுது சிவபெருமான் மணக்கோலத்தைத் திருமறைக்காட்டில் காட்டியருள்வதாகத் திருவாய் மலர்ந்து அதன்படி அக்கோலத்தைக் காட்டியருளினார். மணவாளக்கோலம் மூலத்தானத்தில் சிவலிங்கப் பெருமானுக்குப் பின்பக்கத்தில் இருக்கின்றது. இராமர் இராவணனைக்கொன்ற பழி நீங்கப் பூசித்த தலமாதல் பற்றி இது கோடிக்கரை என்றும் பேசப்படும். இங்குள்ள மணிகர்ணிகைத் தீர்த்தத்தில் மூழ்கி, கங்கை புனிதமாயினாள். இங்கு உள்ள தேவபூடணத்தீர்த்தத்தில் மூழ்கி, காவிரி பரிசுத்தத்தன்மை எய்தினள். பிர்மதேவர் பூசித்துப் பேறு பெற்றனர். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பட்டிருந்த திருக்கதவை, திருஞானசம்பந்தர் கட்டளைப்படி திருநாவுக்கரசர் “பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ” என்று தொடங்கிப் பத்துப்பாடல்களைப் பாடிக் கதவைத் திறப்பித்தார். ஞானசம்பந்தர் தேவாரம்பாடி அதை அடைப்பித்தார்.

முசுகுந்தச்சக்கரவர்த்தி தியாகேசப்பெருமானை எழுந்தருளுவித்த ஏழுவிடங்கத் தலங்களுள் ஒன்று. தியாகர்புவனவிடங்கர். நடனம் ஹம்ச நடனம்.