செய்துவந்தனர். இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து மேன்மலைப் பழையனூரார் ஒருவர் இக்கோயிலில் சில படிமங்களை எழுந்தருளுவித்துள்ளார். கோயில்களுக்கு ஆட்களை விற்கும் வழக்கம் இவ்வூர்க் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது. அம்முறைப்படி இராஜாதிராஜ வளநாட்டு, நாங்கூராகிய ஸ்ரீபாதுளி சதுர்வேதிமங்கலத்துத் தட்டானாகிய சோமன் ஆறு மனிதர்களைப் பதின்மூன்று காசுக்கு விற்றுக் கொடுத்துள்ளான். இங்ஙனமே தலைச்சங்காட்டுத் திருவலம்புரி உடையான் கலியன் குமாரனாகிய தம்பிரான் தோழன் எட்டு ஆட்களை விற்றுக்கொடுத்த செய்திகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 49. திருவீழிமிழலை தலம்: சோழவளநாட்டில் காவிரித் தென்கரையில் விளங்கும் 61 ஆவது தேவாரத்தலம். நாகை மாவட்டம்நன்னிலம் வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப்பாதையில் பூந்தோட்டம் இரயில் நிலையத்துக்குமேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் காத்தியாயன மகரிஷியின்யாகத்தில் தோன்றிய உமாதேவியாரைத் திருமணம் செய்துகொண்டு இறைவன் என்றும் மணக்கோலத்தோடும் இருக்கும் தலம். திருமால் சக்கரம் பெறும் பொருட்டு, நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூவைக்கொண்டு அர்ச்சிக்க, ஒருநாள் ஒரு மலர் குறைய, அதற்காகத் தமது தாமரைமலர் போன்ற கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்துச் சக்கரம் பெற்றதலம். திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞானசம்பந்த சுவாமிகளும் படிக்காசு பெற்றப் பஞ்சம் போக்கியதலம். இத்தலத்து வடக்குவீதியில் அப்பர் சம்பந்தர் திருமடங்கள் தனித்தனியே இருக்கின்றன. மூவர் அருளிய தேவாரமும், சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரிநாதரின்திருப்புகழும் உள்ளன. விமானம்: விண்ணிழி விமானம். இது விஷ்ணுவால் தாபிக்கப் பெற்றுது. மூலத்தானத்துக்குப் பின் பார்வதி பரமேசுவரரது திரு உருவங்கள்
|