பக்கம் எண் :

271
 

என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெருமானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று.

மதயானை பணிந்தது:

நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன்பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன்பாற் சென்று ‘நம் சமயத்திற் கற்றமந்திர வலிமையால் உயிர் பிழைத்தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், ’என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச்செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல்விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் ‘சுண்ணவெண் சந்தனச்சாந்தும்’என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறைவலம் வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.

கல் மிதந்தது:

யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும்‘இனி என்செய்வது’ என்று வினவினான். ‘அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி’ என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக்கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர்.

உண்மைத் தொண்டின் உறைப்புடைய திருநாவுக்கரசர் எந்தை பிரானையே ஏத்தி இறைஞ்சுவன் என்று கூறிச்‘சொற்றுணை வேதியன்’ என்று தொடங்கித் திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப்பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால்கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.