திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திருநாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை “ஈன்றாளுமாய்”என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப்பரவினார். அத்தலத்திலேயே சிலநாள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவதிகை செல்லும் விருப்பமுடையவராய்த் திருமாணிகுழி, திருத்தினைநகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவதிகையைஅடைந்தார். சமணர் இழைத்த துன்பங்களிலிருந்து திருவருளால் மீண்டு கடலில் கல்லே தெப்பமாகக் கரையேறிய திருநாவுக்கரசர் திருவதிகை எழுந்தருளுவது கேட்டு மக்கள் மகிழ்வோடு சிறந்த முறையில் அவரை வரவேற்றனர். “தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் நெஞ்சும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும் உடையராய்” திருநாவுக்கரசர் அடியார் புடைசூழ திருவதிகைத் திருவீதியுள் புகுந்து திருக்கோயிலை அடைந்து “வெறிவிரவு கூவிளம்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சிலநாள் திருஅதிகையிலேயே தங்கி உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார். குணபரஈச்சரம் : சமணர் தூண்டுதலால் தீவினை செய்த பல்லவவேந்தன் தன் பழவினைப் பாசம் நீங்கத் திருவதிகை வந்து திருநாவுக்கரசரை மன்னிப்புவேண்டிப் பணிந்தான். சைவனாக மாறினான். பாடலி புத்திரத்திலிருந்த பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து திருவதிகையில்‘குணபரஈச்சரம்’ என்ற பெயரில் திருக்கோயில்எடுப்பித்தான். திருநாவுக்கரசர் சிவதல யாத்திரை செய்து திருப்பதிகம் பாடித் திருத்தொண்டு செய்ய விரும்பினார். திருவெண்ணெய் நால்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலான தலங்களுக்குச் சென்ற திருப்பதிகம்பாடித் திருப்பெண்ணாகடம் அடைந்தார். இடபக்குறி சூலக்குறி பெற்றது : திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்றும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட
|