யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் ‘ஒன்றுகொலாம்’என்ற திருப்பதிகம் பாடியருளினர். உறங்கி எழுவாரைப்போல மூத்த திருநாவுக்கரசும் எழுந்து பணிந்தார். அப்பூதியாரின் வேண்டுகோளின்படி மீண்டும் அவர்தம் வீட்டிற்கு எழுந்தருளி எல்லோரையும் ஒக்க இருக்கச்செய்து அமுது செய்தருளினார். பின் சில நாட்கள் திங்களூரில் தங்கியிருந்து அப்பூதி அடிகளுடன் திருப்பழனம் சென்றுபணிந்து பாடினார். அங்குப் பாடிய திருப்பதிகத்தில் அப்பூதி அடிகளின் பெருமையையும் அமைத்துப்பாடினார். திருப்பழனத்திலிருந்து திருநல்லூர். வலஞ்சுழி, குடமூக்கு முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டுதிருவாரூர் வந்தார். அடியார் பெருமக்கள் பலரும் எதிர்கொண்டழைத்துப் போற்றினர். திருவாரூரில் புற்றிடங்கொண்டாரையும் தியாகேசனையும் பணிந்து “பாடிளம் பூதத்தினானும்”என்று தொடங்கிப் பதிகம் பாடினார். அப்பொழுது ஆரூரில் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப்பெருமான் திருவுலாப் போந்தருளியது கண்டு வணங்கி மகிழ்ந்து திருப்புகலூர்க்குப் புறப்பட்டார். சம்பந்தர் சந்திப்பு 2 : திருவாரூரிலிருந்து வழியில் பல சிவ தலங்களையும் தரிசித்துக் கொண்டே திருப்புகலூருக்கு வந்தார். அப்பொழுது முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரும் அப்பரை எதிர்கொண்டழைத்தார். திருவாரூரில் நிகழ்ந்த சிறப்பினைத் திருஞானசம்பந்தர் வினவத் திருநாவுக்கரசர், “முத்து விதானம்” என்றுதொடங்கித் திருவாதிரைச் சிறப்பை எடுத்துரைத்தார். இதைக்கேட்ட சம்பந்தர் ‘நானும் திருவாரூர் சென்று மீண்டும் உம்மோடு உடனுறைவேன்’ என்று கூறித் திருவாரூர்சென்றார். திருப்புகலூரை அடைந்த திருநாவுக்கரசர்பெருமானை வணங்கிப் பாமாலைகள் பாடியும், உழவாரப்பணிசெய்தும் அங்கிருந்துகொண்டே அருகில் உள்ள சிவதலங்களையெல்லாம் சென்று தரிசித்திருந்தார். திருவாரூர் சென்ற திருஞானசம்பந்தரும் திருப்புகலூர் மீண்டார். இருவரும் முருகநாயனார் திருமடத்தில்அளவளாவி மகிழ்ந்திருந்தனர். படிக்காசு பெற்றது: சிலநாட்கள் தங்கியிருந்து திருப்புகலூரில் நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் சிறுத்தொண்டர். நீலநக்கர், முருக நாயனார் ஆகியோரிடம் விடைபெற்றுப் புறப்பட்டுத் திருக்கடவூர் வந்தனர்.
|