பெற்றது, அன்று முதலாக அக்கதவு அடைக்கவும் திறக்கவும்பெறுவதாயிற்று. திருவாய்மூரில் திருக்காட்சி: திருவருள் நலம்பெற்ற இரு பெருங்குரவர்களும் அடியார் புடைசூழ திருமறைக்காட்டில் திருமடத்தில் தங்கினர். அன்றிரவு திருநாவுக்கரசர் தாம் அரிதில் திறக்கப்பாடியதையும், ஆளுடைய பிள்ளையார் விரைவில் அடைக்கப் பாடியதையும் எண்ணித் தம் பாடலுக்கு கதவு திறக்கக் காலந்தாழ்ந்தமைக்குக் காரணம், இறைவன் திருக்குறிப்பை நாம் உணராது அயர்த்தமையே என்று கவலை கொண்டு திருமடத்தில் ஓர் பல் அறிதுயில் கொண்டார். அவர் கனவில் இறைவன் தோன்றி ‘நாம் திருவாய்மூரில் இருப்போம் எம்மைத் தொடர்ந்துவா’ என்று கூறி மறைய உடனே துயிலெழுந்து நாவுக்கரசரும் இறைவனைப் பின் தொடர்ந்து ‘எங்கே யென்னை’ என்றுதொடங்கும் திருப்பதிகம் பாடிக்கொண்டே வாய்மூருக்குச் சென்றார். முன்னே சென்று கொண்டிருந்த பெருமான் பொற்கோயில் ஒன்றைக் காட்டி மறைந்தனன். ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வாய்மூருக்குச் சென்றதை யறிந்து அவரைத் தொடர்ந்து வாய்மூரை அடைந்தார். ‘திறக்கப்பாடிய என்னினும் அடைக்கப்பாடிய ஞானசம்பந்தரும் வந்துவிட்டார் இனியும் தம்மைக் காட்டாது மறைப்பரோ” என்று பாடினார். இறைவன் ஞானசம்பந்தர் காணக் காட்சி வழங்கினன். ஞானசம்பந்தர் காட்ட நாவுக்கரசரும் இறைவன் திருக்காட்சி கண்டு இன்புற்று“பாட அடியார்” என்று தொடங்கிப் பாடிப் பணிந்தார். திருவாய்மூரில் இருவரும் சிலநாள் தங்கித் திருமறைக் காட்டிற்கு எழுந்தருளினர். அப்போது பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த தூதர் சிலர் ஞானசம்பந்தரைக் கண்டு பாண்டிநாடும் பாண்டியனும் சமணம் சார்ந்து வருந்துவதைக் கூறினர். திருவெண்ணீற்றின் துணையை நினைந்து ஞானசம்பந்தரும் பாண்டிநாட்டுக்குப் புறப்படத் துணிவுகொண்டார். திருநாவுக்கரசர் பிள்ளையாரை நோக்கி தீயோராகிய அமணர் வஞ்சனையில் மிக வல்லவர். தேவரீர் அங்குச் செல்லல் ஆகாது. மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை என்றனர். ஞானசம்பந்தர் ‘வேயுறுதோளிபங்கன்’என்று தொடங்கிக் கோளறு திருப்பதிகம் பாடிக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டார்.
|