அமணர் வஞ்சம் அகற்றியது: திருநாவுக்கரசர் பின்பு திருமறைக்காட்டிலிருந்து புறப்பட்டு திருநாகைக்காரோணம், திருவீழிமிழலை, திருவாவடுதுறை முதலான தலங்களை வணங்கிக்கொண்டு திருப்பழையாறைவடதளி என்னும் தலத்தை அடைந்து திருக்கோயில் விமானத்தைத் தொழுதார். அங்குள்ளோர் இது சமணர் தெய்வத்தின் விமானம் என்றனர். நாவுக்கரசர் மனம் புழுங்கிச் சிவபெருமான் திருவுருவத்தை இக்கோயிலுட் கண்டாலன்றி மேற்போகேன் என்று திருவமுது கொள்ளாது பட்டினி கிடந்தார். அடியார் பசி பொறாது ஆண்டவன் சோழமன்னன் கனவில்தோன்றி ‘நாவுக்கரசன் நம்மைக்காணச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான், அமணர் நம்கோயிலை மறைத்தனர். நீ அவர்களை அழித்துநமக்கு ஆலயம் செய்க’ என்று கட்டளையிட்டனன். அவ்வாறேஅரசனும் சமணர் மறைத்திருந்த சிவலிங்கத்தைவெளிப்படுத்தி நாவுக்கரசரை வணங்கினான். அமணர்களை யானையை ஏவி அழிக்கச் செய்தான். வடதளியில் பெரிய சிவாலயமெடுத்து சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மகிழ்ந்தான். திருநாவுக்கரசரும் ஆலயத்துட்சென்று “தலையெலாம்” என்று தொடங்கிப் பதிகம் பாடிப்போற்றினர். பொதிசோறு பெற்றது : திருநாவுக்கரசர் அங்குநின்றும் நீங்கி ஆனைக்கா, எறும்பியூர், கற்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். பைஞ்ஞீலிக்குச்செல்லும் வழியில் நடையால் வருந்தி இளைத்தும் மனந்தளராமல் சென்றுகொண்டிருந்தார். தொண்டர் வருத்தம் தரியாதபெருமான் அவர் வரும் வழியில் சோலை குளம் உண்டாக்கி அந்தணர் வடிவோடு பொதிசோறு சுமந்து வீற்றிருந்தார். திருநாவுக்கரசர் அருகில் வந்தவுடன் ‘வழிநடைவருத்தத்தால் மிக இளைத்தீர். என்பால் பொதிசோறு இருக்கிறது. உண்டு இளைப்பாறிச் செல்க’ என்று கூற அவ்வண்ணமே பொதிசோறு உண்டு இளைப்பு நீங்கிய நாவுக்கரசரும்‘தாங்கள் யார் எங்கு செல்கின்றீர்கள்’ என்று கேட்க அந்தணரும் நாம் திருப்பைஞ்ஞீலி செல்கின்றோம் என்று கூற இருவரும் திருப்பைஞ்ஞீலிக்குப் புறப்பட்டனர். அந்தணர் பின்னே அப்பரும் சென்றார். திருப்பைஞ்ஞீலியை அடைந்ததும் இறைவன் மறைந்தான். அப்பர் இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து பாடித் துதித்தார், அங்குச் சிலநாள் தங்கித் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார்.
|