திருவடிகள் தாங்கும் பெருவாழ்வு வந்து எய்தப்பெற்று இங்குற்றேன்’ என்று கூறியருளினர். அதைக்கேட்ட பிள்ளையார் பதைபதைத்து விரைந்து கீழே இறங்கி அப்பரைப் பணியவந்தார். அவர்க்கு முன் நாவுக்கரசர் பணிந்தார். இவ்வாறு இருவரும் சந்தித்து இறைவன் திருமுன் சென்று பணிந்து அத்தலத்தில் உடன் எழுந்தருளி அளவளாவியிருந்தனர். திருஞானசம்பந்தர் வாயிலாக மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் பெருமையைக் கேட்ட திருநாவுக்கரசர் அவர்களைக் கண்டு மகிழவும் பாண்டியநாட்டுத் தலங்களைத் தரிசிக்கவும் புறப்பட்டார். திருஞானசம்பந்தரும் தொண்டைநாட்டுத் தலங்களைத் தரிசிக்கச் சென்றார். பாண்டிநாட்டுத் தலயாத்திரை : திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியினின்றும் புறப்பட்டுத் திருப்புத்தூர் சென்று பணிந்து பாடி திருவாலவாய்க்குச் சென்றார். செந்தமிழ்ச் சொக்கனையும் அங்கயற்கண்ணியையும் பாடி வணங்கினார். பாண்டியமன்னன் நெடுமாறனும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அடிபணிந்துபோற்ற மதுரையில் சிலநாள் தங்கினார். பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருப்பூவணம் இராமேச்சுரம் நெல்லை கானப்பேர் முதலிய தலங்களைத் தரிசித்துச் சோணாடு திரும்பினார். பல பதிகளையும் மீண்டும் தரிசித்துக்கொண்டு திருநாவுக்கரசர் திருப்புகலூரை அடைந்தார். நாடோறும்இறைவனைப் பல பதிகங்களால் பாடியும் உழவாரப்பணி செய்தும் திருப்புகலூரில் தங்கியிருந்தார். திருப்புகலூரில் திருவடிப்பேறு: இறைவன் திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகிற்குக் காட்டத் திருவுளங்கொண்டான். ஆண்டஅரசு உழவாரப்பணி செய்யும் இடங்களில் பொன்னும் நவமணிகளும் கிடக்கும்படிச் செய்தான். திருநாவுக்கரசர் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்பு உடையாராதலின் அவற்றை ஏனைய கற்களோடு வாரித் தடாகத்துள் எறிந்தார். அப்பரின் தூய துறவற நிலையை மேலும் உலகிற்கு விளக்க எண்ணிய இறைவன் அரம்பையர் பலரை அங்குவரச் செய்தனன்.
|