அரம்பையர் ஆடல் பாடல்களால் பல்லாற்றானும் திருநாவுக்கரசரை மயக்க முற்பட்டனர். ஒன்றினாலும் மனம் திரியாத அப்பர் அவர்களைநோக்கி ‘உம்மால் இங்கு எனக்கு ஆகவேண்டியகுறை யாதுளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளாயினேன்’ என்னும் கருத்தமைந்த ‘பொய்மாயப் பெருங்கடலில் என்று தொடங்கும் திருத்தாண்டகத்திருப்பதிகத்தால் தெரிவித்தருளினர். அரம்பையரும் சோர்ந்து அரசை வணங்கி அகன்றனர். இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக்கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். முன்னுணர்ச்சியால் ‘புகலூர்ப்பெருமான் சேவடிக்கீர்த் தம்மைப் புகலாகக்கொள்வான்’ என்ற கருத்துப்பட திருவிருத்தங்கள் பலவும் பாடினார். எல்லாவுலகமும் போற்ற “எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ” என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட அரசு ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார். அகச்சான்றுகள் : காலக் குறிப்பு : திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அடியார்களில் சிறுத் தொண்டரும் சமகாலத்தவர் என்பது வரலாற்றால் இனிது விளங்கும் உண்மை. திருநாவுக்கரசர் முதிர்ந்தவயதிலேயே திருஞானசம்பந்தரைச் சந்தித்திருக்கவேண்டும் என்பதுதெளிவு. சம்பந்தர் நாவுக்கரசரை அப்பரே என்று அழைத்த வரலாற்றுக் குறிப்பும் இதனை வலியுறுத்தும். இவர்கள் காலங்களில் குறிக்கப்படும் மன்னர்கள் பல்லவர்களில் மகேந்திரவர்மனும், பாண்டியர்களில் நெடுமாறனும் சாளுக்கியர்களில் புலிகேசியும் ஆவர். மகேந்திரவர்மன் கி.பி.600 முதல்630 வரை காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தவன். சமணர் சொற்கேட்டு திருநாவுக்கரசரைத் துன்புறுத்தியவனும் பின் திருநாவுக்கரசர் பெருமையை உணர்ந்து சிவபிரான் திருவருட்பேற்றுக்குரியவனாய்க் குணபரன் என்ற தன் பெயரால் குணபரஈச்சரம் என்ற திருக்கோயிலைத் திருவதிகையில் கட்டியவனும் இம் மன்னனேயாவன். இவன் ஆட்சிக்காலம் மேலே குறித்துள்ளதாகும். சைவனாக மாறிய
|