பக்கம் எண் :

284
 

பிறகு சமணம் புத்தம் முதலிய மதங்களை இழித்துக் கூறியுள்ளான். தான் நிறுவிய திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயிலில் தான் சமணனாக இருந்து சைவனான நிகழ்ச்சியைக் குறித்துள்ளான்.

பாண்டியர்களில் திருஞானசம்பந்தரால் சைவனாக்கப்பெற்ற மன்னன் நெடுஞ்செழியன் கி.பி.640 முதல் 670 வரை ஆட்சி புரிந்தவன்.

நரசிங்கவர்மனது படைத்தலைவராயிருந்து வடபுலத்திற் சென்று செய்த வாதாபிப்போரில் வெற்றி கொண்ட பரஞ்சோதியாரே சிறுத்தொண்டராவர். வாதாபிப்போர் கி.பி.642 இல் நடந்திருக்க வேண்டும்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள இக் குறிப்புக்களைக் கொண்டு கி.பி. 574 க்கும் 655 க்கும் இடையே அப்பர் சுவாமிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கோவைகிழார் ஆராய்ந்து கூறியுள்ளார். பழைய வெண்பா ஒன்று அப்பருக்கு வயது எண்பத்தொன்று என்று கூறுகிறது.

முன்னைநிலை:

திருநாவுக்கரசர் ஒரு முனிவராய்த் திருக்கயிலையில் தவம் இயற்றிய பெரியார் என்றும் இறைவனருளால் திருநாவுக்கரசராகத் திருவவதாரம் செய்தார் எனவும் பெரியபுராணத்துள் குறிப்பிக்கப்படுகிறது.

“உன்னுடைய மனக்கவலை ஒழிநீஉன் னுடன் பிறந்தான்
முன்னமே முனியாகி எனையடையத் தவம்முயன்றான்” (தி.12திருநாவு. புரா.48)

“நாயேன் முன்னைப் பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண்டாங்கே பன்னியநூற்றமிழ்மாலை பாடு வித்தென், சிந்தை மயக் கறுத்த திரு வருளி னானை” (அப். தே.)

“நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை’ (அப். தே.)

“மறப்படுமென் சிந்தைமருள் நீக்கினான் காண்” (அப். தே.)