பக்கம் எண் :

288
 

வலம் வந்து பணிந்து சென்றது. ‘சுண்ணவெண் சந்தனச்சாந்தும்’என்ற திருப்பதிகத்துள் ‘அஞ்சுவதியாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை’ என்று அஞ்சாமையும்

“தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்கு(மோ)”

என்ற திருப்பாடலில் இந்நிகழ்ச்சியையும் குறிப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.

கல்லொடு கடலில் இடப்பெற்றது :

சமண குருமார்களின் சொற்படி பல்லவமன்னன் திருநாவுக்கரசரைக் கல்லொடு பிணைத்துக் கடலில் தள்ளுமாறு கட்டளையிட்டான். கடலில் இடப்பெறற திருநாவுக்கரசர் திருவைந்தெழுத்தைத் துதித்து ‘சொற்றுணை வேதியன்’என்னும் திருப்பதிகம் பாடிக் கல்லே புணையாகக் கரைசேர்ந்தார்.

“கற்றுணைப் பூட்டி யோர்கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே” (தி.4. ப.11. பா.1)

“கல்லி னோடெனைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர்புக ஊக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன்
நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேனன்றே” (தி.5. ப.72.பா.7)

“நெடுநீரில் நின்றேற நினைந்தருளி
ஆக்கினவாறடியேனை”

“நெடுநீரில் நின்றேற நினைந்தருளி
உருக்கினவாறடியேனை”

என்பன அகச்சான்றுகள். நம்பியாண்டார் நம்பிகளும் இதனைப்போற்றுவர்.

“தெண்கடலிற்பிணியன கல்மிதப்பித்தன
நாவுக்கரசர் பிரான்றன் அருந்தமிழே” -தி.11 திருத்தொண்டர்திருவந்தாதி.