பக்கம் எண் :

289
 

சூலக்குறி இடபக்குறி பெற்றது :

திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடத் திருக்கோயிலில் திருநாவுக்கரசர் சூலக்குறி இடபக்குறி பொறிக்கப்பெற்றனர். பிறமதத்துள்ளும் இதுபோன்ற சமயச்சின்ன முத்திரை பொறிக்கும் வழக்கம் உள்ளது.

“மின்னாரும் மூவிலைச்சூலம் என்மேற் பொறி”

“இடபம் பொறித்தென்னை யேன்று கொள்ளாய்” (தி.4. ப.109. பா.1, 10)

திருவடி சூட்டப் பெற்றது :

திருச்சத்தி முற்றத்துள் இறைவனைத் திருவடி தீக்ஷை செய்யுமாறு வேண்டி இறைவன் அருள்வாக்குப்படித் திருநல்லூர் சென்று சிவபெருமானால் திருவடி தீக்ஷை செய்யப்பெற்ற வரலாற்றுக்குரிய அகச்சான்றுகள்.

“பூவாரடிச்சுவடு என்மேற் பொறித்துவை
.....திருச்சத்தி முற்றத்துறையும் சிவக்கொழுந்தே”(தி.4. ப.96. பா.1)

“நனைந்தனைய திருவடி யென்தலைமேல் வைத்தார்
நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே” (தி.6 ப.14 பா.1,11)

“காலனை வீழச்செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவாய் இருக்கப் பெற்றேன்” (தி.4 ப.37 பா.1)

“அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என்
தலைமேல் வைத்த தீங்கரும் பை” (தி.6 ப.68 பா.4)

“பிரானாய் அடி என்மேல் வைத்தாய்நீயே” (தி.6 ப.38 பா.1)

நம்பியாண்டார் நம்பிகளும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நற்றவன் நல்லூர்ச்சிவன் திருப்பாதம்தன்
சென்னிவைக்கப் பெற்றவன்” -தி.11 திருத்தொண்டர்திருவந்தாதி