விடந் தீர்த்தது: அப்பூதியடிகள் திருநாவுக்கரசரையே தெய்வமாகக் கருதி அவர் பெயரையே தாம் செய்யும் அறங்களுக்கும் வழங்கியதை வரலாறு கூறுகிறது. நம்பியாண்டார்நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் “தனமாவது திருநாவுக் கரசின் சரணமென்னா மனமார்புனற்பந்தர்வாழ்த்திவைத்தங்கவன்வண்டமிழ்க்கே இனமாத்தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான் அனமார் வயற்றிங்களூரினில் வேதியன் அப்பூதியே” -தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி என்று குறிப்பிட்டுள்ளார். அவரைச் சந்தித்தற்குச் சான்றாக “வஞ்சித்தென்” என்று தொடங்கும் பாடலில் அப்பூதியாரின் பக்தி போற்றப்பட்டுள்ளது. மூத்த திருநாவுக்கரசரை விடந்தீண்டியதும், திருநாவுக்கரசர்“ ஒன்று கொலாம்” என்று தொடங்கி விஷம் தீர்க்கப் பாடியதும், பாடியவுடன் சிறுவன் எழுந்து வணங்கினான் என்பதும் வரலாறு. திருவாதிரைத் திருநாள்: திருப்புகலூரில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரைச் சந்தித்தபொழுது திருவாரூர்த் திருவாதிரைச் சிறப்பைச் சொல்லியருளியதற்கு அப்பதிகமே சான்றாக உள்ளது. “அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்” என்று முடியும் தொடர் திருவாதிரைச் சிறப்பைத் தெரிவிக்கிறது. படிக்காசு பெற்றது: திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் நாடோறும் படிக்காசு பெற்றுத் தொண்டர்க்கு அமுதளித்தனர் என்பதும், திருஞானசம்பந்தர்க்கு வாசியுள்ளகாசும், திருநாவுக்கரசர்க்கு வாசியில்லாக்காசும் இறைவனால் அளிக்கப்பெற்றன என்பதும், திருஞானசம்பந்தர் வாசிதீரப்பாடிக் காசுபெற்றார் என்பதும் வரலாறு. “பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு வாடிவாட்டம் தவிர்ப்பா ரவரைப்போல்” (தி.5.ப.50. பா.7)
|