“ஆளுறா ஆயிரம் சமணும் அழிவாக்கினான்” “மூக்கினான் முரன்றோதியக் குண்டிகை தூக்கினார் குலந் தூரறுத்தே தனக்கு ஆக்கினான்” (தி.5. ப.58. பா.9,2) பொதிசோறு பெற்றது: திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலி செல்லும்போது வழிநடை வருத்தமும் பசியும் தீர இறைவன் பொதி சோறு அளித்ததும், திருப்பைஞ்ஞீலி வரை அழைத்துச் சென்று மறைந்ததும் வரலாறு. சேக்கிழார்பெருமான் “ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளா அளித்த கருணை யெனப் பாடல் புரிந்து” திருநாவுக்கரசர் வணங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். திருப்பைஞ்ஞீலித் திருப்பதிகம் ஒன்றே உள்ளது. அதில் இக்குறிப்பில்லை. ஆகையால் இத்திருப்பதிகம் கிடைக்கவில்லை என்றறிகின்றோம். கோயம்புத்தூர் திரு. சீ.கே.எஸ். அவர்களும் இதனைக் குறித்துள்ளார்கள். கயிலைக் காட்சி : திருக்காளத்திமலையில் இறைவனைத்தொழுத திருநாவுக்கரசர்க்குத் திருக்கயிலாய தரிசனம் செய்யவேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. “கனத்தகத்தான் கயிலாயத் துச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண்ணுளானே” என்று காளத்தியிலிருந்தே பாடிப் பரவினார். அங்கிருந்து திருக்கயிலாய யாத்திரை சென்றதும் இறைவன் இன்னும் சிலகாலம் தமிழ்மாலை பாடவேண்டுமென்ற கருத்தால் திருநாவுக்கரசரைத் திருவையாற்றில் தோன்றச்செய்து கயிலைக் காட்சி காட்டியருளியதும் வரலாறு. கயிலைக் காட்சியை அப்பர் நேரிற் கண்டு அதன் இயல்பு களை உள்ளவாறு பாடியருளியதை திருப்பதிகக் குறிப்புக்கள் நன்கு உணர்த்தும். மேலும் காடொடு நாடும் மலையும் கைதொழுது போற்றிச்சென்ற திருநாவுக்கரசரைப் பெருமான் தவமுனிவராய் வந்து பொய்கையில் மூழ்கும்படிச் செய்து திருவையாற்றில் தோன்றச்செய்து கயிலைக்காட்சி வழங்கியருளிய இவ்வரலாற்றினை, “ஏடுமதிக் கண்ணியினானை ஏந்திழையா ளொடும்பாடிக் காடொடு நாடும் மலையும் கைதொழுதாடா வருவேன்” (தி.4.ப.5)
|