பக்கம் எண் :

295
 
“திருநாவுக் கரசடி யவர்நாடற் கரியவர்

தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல்

வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில

வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்

உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்

உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்

குருவாகக் கொடுசிவன் அடிசூடத் திரிபவர்

குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே”

திருப்புகலூரில் இறைவன் திருவடியடையும் முன்னுணர்வு தோன்றப் பல பதிகங்களைப் பாடியுள்ளார் அப்பர்.

“தன்னைச் சரணென்று தாளடைந் தேன் தன் அடியடையப்
புன்னைப் பொழிற்புகலூ ரண்ணல்செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே”(தி.4. ப.105. பா.1)

“உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர்மேவிய
புண்ணியனே” (தி.6. ப.99. பா.10)

கல்வெட்டுக்களில் :

இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தென்னவன் மூவேந்த வேளான் என்பவன்(கி. பி. 1013 - 14) திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருளுவித்துத் திருவிளக்கு அணிகலன் முதலியன அளித்துள்ள செய்தி குறிப்பிடப்படுகிறது.

“பாதாதிகேசாந்தம் இருபத்து இருவிரலே இரண்டுதோரை உயரத்து இரண்டு திருக்கை உடையராகக் கனமாக எழுந்தருளுவித்த திருநாவுக்கரசர் பிரதிமம் ஒன்று; இதனொடுங் கூடச்செய்த எண்விரலே ஆறுதோரைச் சம சதுரத்து நால்விரல் உயரத்து பீடம் ஒன்று” என்பது கல்வெட்டு வாசகம். மேலும், தஞ்சைப் பெரியகோயிலில் திருமுறை ஓதுதற்கு நாற்பத்தெட்டுபேரும் உடுக்கை கொட்டி மத்தளம் வாசிப்பார் இருவரும் நியமிக்கப்பெற்றிருந்த செய்தி பிறிதோர் கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கல்வெட்டுக்களிலிருந்து இராஜராஜசோழன் காலத்தும் இராஜேந்திர சோழன் காலத்தும் சமயாசாரியர் வழிபாடு சிறந்திருந்த செய்தி அறியலாம்.