திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவவதாரத் தலமாகிய திருவாமூர்ப் பசுபதீசுவரர் ஆலயத்தில் குலோத்துங்கன் I காலத்தில் இரவீசுவரம் உடையார் கோயிலில் தாபித்திருக்கும் திருநாவுக்கரைய தேவர் திருக்கோயில் திருப்பணிகளுக்குத் திருமுனைப்பாடி நாட்டுக் கிழாமூர் மக்கள் ஒரு வேலி நிலம் விற்று அளித்த செய்தி காணப்படுகிறது. மேலும் பிற்காலத்து, திருவாமூர்க்கு அருகில் முத்து ரெட்டியார் என்பவர்(1933-1934) மூன்றுகாணித் தோப்பு ஒன்றை விளக்கு வைப்பதற்காக அளித்துள்ளார். திருவதிகைக் கோயிலில் குலோத்துங்கன் வாகீசர் மடத்திற்கு நிலம் அளித்த செய்தியும், அவ்வரசன் காலத்தில் அதிராசமாங்கலிய புரத்துக் குடிமக்கள் 4800 குழி நிலத்தைத் திருநாவுக்கரசர் மடத்தில் அன்னதானமளித்தற்கு வழங்கியருளிய செய்தியும் கூறப்படுகிறது. குலோத்துங்கனின் போர்ப்படைத் தலைவனாகிய கருணாகரத் தொண்டைமான் செய்த திருநாவுக்கரசர் ஆலயத்தைத் திருப்பணி செய்த விவரம் பாடல்களால் குறிக்கப்பெற்றுள்ளது. “ஈசன் அதிகையில்வா கீசன் எழுந்தருள மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல் விளைவித்த வேணாடும் வெற்பனைத்தும் செந்தீ விளைவித்தான் தொண்டையர் மன்” என்பது அக்கல்வெட்டுப் பாடல். திருவாரூர், தியாகேசர் திருக்கோயிலில்குலோத்துங்கன் II காலத்தில் மூவர் திருவுருவங்களைத் தாபித்து நிலதானம் அளித்த செய்தி காணப்படுகிறது. கல்வெட்டில் வடமொழி வாசகத்தில் திருநாவுக்கரசரை வாக்கதிபதி என்று குறிக்கப்படுகிறது. திருப்புகலூரில் திருநாவுக்கரசர் கோயிலுக்கு இராஜராஜன் I நித்திய பூஜைக்கு நிபந்தம் அளித்துள்ளான். இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் குளிச்செழுந்த நாயனார் என்று வரும் பெயர் கயிலைகாணச் சென்று தடாகத்து மூழ்கி எழுந்த காரணத்தால் அப்பரடிகளைக் குறிப்பிடும் பெயரெனக் கொள்ளலாம். மேலும் திருமுறை ஓதுவார்க்கு நிபந்தமளித்த செய்தியும் காணப்படுகிறது. மேலும் திருவீழிமிழலை, திருமயானம், தீர்த்தநகரி, திருக்கச்சூர், திருப்புத்தூர், கோயிலூர், சூலமங்கலம், கீரனூர் முதலிய தலங்களில் திருநாவுக்கரசர் தொடர்பான செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.
|