பக்கம் எண் :

298
 


சிவமயம்

திருநாவுக்கரசர் பெருமை

தருமை ஆதீனப் புலவர், பல்கலைக்கல்லூரி முதல்வர்,
சித்தாந்த சிரோமணி, சித்தாந்த ரத்நாகரம், மதுரகவி,
முதுபெரும்புலவர்.
வித்துவான் முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்

திருமுனைப்பாடி நாட்டுத் திருவாமூரில் சைவ வேளாளர் குலத்தில், குறுக்கையர் குடியில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் தோன்றியவர். திலகவதியார்க்குப் பின் வந்தவர். ‘மருள் நீக்கியார் என்ற பெயரினார். கலை பலவும் நிரம்பக் கற்றவர். இருவரும் பெற்றோரை இழந்தனர்.

திலகவதியாரை மணக்க இசைந்த கலிப்பகையார் சோழ மன்னன் படைத் தலைவர். அவர் சென்று வடநாட்டு மன்னரொடு நெடுநாள் போர் புரிந்து துறக்கம் உற்றார். அதை அறிந்த திலகவதியார் தாமும் இறக்கத் துணிந்தபோது, மருள்நீக்கியார் விழுந்து வணங்கி, ‘அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உம்மை வணங்கப் பெறுதலினால் உயிர் தரித்தேன். இனி என்னைத் தனியாகக் கைவிட்டு ஏகுவீர் எனில், யானும் உமக்கு முன்னம் உயிர் நீப்பன்’என்று மொழிந்து இடருள் முழுகினார். திலகவதியாரும்‘தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா’, இறப்பை விலக்க, உயிர் தாங்கி, அம்பொன் மணி நூல்தாங்காது, அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி, மனைத்தவம் புரிந்திருந்தார். சிவபெருமான் திருவடிக்கண் அன்பு பூண்டு, திருவருள் நெறி ஒழுகி வாழ்ந்தார்.

மருள்நீக்கியார் சமண் சமய நூல்களைக் கற்றார். அச்சமயத்தைச் சார்ந்தார். சமணர்க்குத் தலைவராய்த் தருமசேனர் எனப் புகழ் பெற்று விளங்கினார்.

திருவதிகையில் திருத்தொண்டு புரிந்துறையும் திலகவதியார், தம் தம்பியார் பரசமயமான படுகுழியில் வீழ்ந்து கெடுவதை ஆற்றாராய், திருவீரட்டானேசுவரரை நாள்தொறும் வேண்டி, அக்குழியினின்றும் சைவ சமயப் பேரின்பக் கரையில் ஏற்றியருளப்