போற்றினார். ‘சூலை நோய் தந்து ஆட்கொள்வோம் கவலாதே’ என்று கனவில் அருளினார் அதிகைப்பிரானார். அவ்வாறே அவர்க்குச் சூலை நோய் உண்டாயிற்று. மந்திரம் முதலியவற்றால் நீக்க முயன்றனர். நோய் மேன்மேல் மிகுந்ததே அன்றிக் குறைந்திலது. மிக வருந்தித் தமக்கையார்க்குச் சொல்லி அழைத்துவர ஆள்விட்டார். அவர் அங்கு வாரேம் என்றார். மருள்நீக்கியாரே தமக்கையார்பால் ஏவலன் துணைக்கொண்டு வந்தார்; கண்டார்; வணங்கினார். திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப், பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்து ஏற்று உருஆர அணிந்து. உற்ற இடத்து உய்யும் நெறிதரும் அவர், முன் செல்லப் பின்சென்று, திருவீரட்டானத்திறைவர்பெருங்கோயிலைத் தொழுது வலங்கொண்டு இறைஞ்சி நிலமிசை விழுந்தார். தம்பிரான் திருவருளால் தமிழ்மாலைகள் சார்த்தும் உணர்வுற்றார். குருவருள் கிடைக்கப்பெற்றார். ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார். சூலை அகன்றது. திருவருள் பெறத் துணையாயிருந்த சூலைக்குச் செய்யும் நன்றியை நாடினார். சிவபிரான், செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடை பாடியதற்குத் திருவுளம் மகிழ்ந்ததால், ‘நாவுக்கரசு என்னும் பெயர் வழங்குக‘என்று வானிலே உடலிலியொலியாக ஒரு வாய்மை எழுந்தது. அந்நாள் முதல், முப்பொறித் தூய்மையொடும் திருப்பணி செய்பவராய், சிவ சின்னம் பூண்டு, தியானம் ஞானம் திருவாசகம் உழவாரம் எல்லாம் கொண்டு கசிந்துருகி வழிபட்டு இன்புற்றிருந்தார். சமணர் துன்புறுத்த முயன்று, நீற்றறையில்இட்டனர். ‘ஈசன் அடியார்க்கு ஈண்டு வருந்துயர் உளவோ’? ‘வீங்கிள வேனிற் பொழுது; தைவருதண் தென்றல்;தண்கழுநீர்க்குளம்போன்று; மொய் ஒளி வெண்ணிலவு அலர்ந்து; மாசில் வீணை யொலியினதாகி; ஈசன் எந்தை இணையடி நீழல் அருளாகிக் குளிர்ந்தது அந்நீற்றறை. மாசிலாமதியும் மங்கையாம் கங்கைப் புனலும் மன்னிவளர் சென்னியன் எனப் பேச இனியானை வணங்கி இனிதிருந்தார் நாவரசர். ஏழுநாள் கழித்து, பல்லவனும் சமணர் பல்லவரும் நீற்றறையைத் திறந்து பார்த்தனர். வியந்தனர். இன்ப வெள்ளத்தில் முழுகி அம்பலவாணர் மலர்த்தாளமுதுண்டு தெளிந்து உவந்திருந்த நாவரசரைத் தீய நஞ்சு கலந்தபாலடிசில் உண்ணப் பண்ணினர். எந் நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு, இந் நஞ்சும் அமுதாயிற்று. ஆனது அற்புதமோ? ஆளுடைய அரசரை மிதிக்க யானையை ஏவினர். அது பாகனையும்
|