பக்கம் எண் :

350
 
26.தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

6


ஐந்தொழிற் கூத்து எங்கும் நிறைந்த சிவமூர்த்திக்கே உரியது. தில்லை முதலிய இடங்களிலே தான்திருக்கூத்துண்டு என்பது சாத்திரம் உணரார் கூற்று. மயில் - ஆண். பிணைந்து- இணைந்து; பின்னி.

6. பொ-ரை:குளிர்ந்த பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடி உள்ளம் குழைந்த திருவடி நினைவினேன் ஆகி உணர்ந்து உருகி வரும் அடியேன் தலைமையை உடைய எம்பெருமான் உகந்தருளியிருக்கின்ற ஐயாற்றை அடையும்போது நல்லநிறமுடைய ஆண் பகன்றில் பெண் பகன்றிலோடு இணைந்து இரண்டுமாய் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.

கு-ரை: தண்மை- குளிர்மை. மதி - பிறை. நிறைமதி அன்று. தையல் நல்லாள்- நாய்ச்சியார். உள்மெலி சிந்தையன் - உள்ளம்குழைந்த திருவடி நினைவினன். உணரா - உணர்ந்து; உருகா- உருகி; செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம். அண்ணல் - தலைவன். அமர்ந்து - விரும்பி. உறைகின்ற -எழுந்தருளியிருக்கின்ற. வண்ணம் - அழகு; நிறமும் ஆம். நீருறை மகன்றில் (குறுந்தொகை 57) துணைபிரி மகன்றில்(சிந்தாமணி 302) என்றதோ வேறோ தெரியவில்லை.‘பகரத்தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்தேத்தத் தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே’எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் (தி.1 ப.66 பா.3)அருளியதிலும் ‘பகன்றில்’ என்றே காணப்படுகின்றது. இதில் அதன் பெருமை புலனாகின்றது. பக + அன்றில். மக+ அன்றில் இரண்டும் துணை பிரியா மகன்றில். மகன்று- மகனை (ஆணை) யுடையது. துணை பிரியா மகன்றில் என்றதை நோக்கி, பகு + அன்றில் எனப் பிரித்து, துணை பிரி அன்றில் எனலாம். பகன்றில் என்பது மகன்றில் என மருவியுமிருக்கலாம். பிரியாத இயல்பு நோக்கி, பகா அன்றில் என்றிருந்தது பகன்றில் என மருவியதெனலும் கூடும். யாது பகன்றிலொடு ஆடி வைகி வருவது?