பக்கம் எண் :

42
 

வலம் கொண்ட சொல்லாள் என்ற பெயர்வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. யாழைப்பழித்த மொழியாள் என்பதுபோல இங்கு குழலை வென்ற சொல்லாள் என்கிறார். அம்மையின் குரலின் இனிமை பற்றி இங்ஙனம் சிறப்பித்துள்ளமை கண்டு மகிழலாம்.

அஞ்சுவேலி:

திருவாரூர்ப்பூங்கோயில் அஞ்சுவேலி நிலப்பரப்பில் உள்ளது. அதை ஒட்டி மேல்புறம் உள்ள கமலாலய தீர்த்தக்குளம் அஞ்சுவேலி. தியாகராஜப் பெருமானுக்கு உகந்த செங்கழுநீர் மலர் மலரும் ஓடை அஞ்சுவேலி. இதனை ஆரூர்ப்பாடலில் (தி.4 ப.53 பா.7), “அஞ்சணைவேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே” என்று அறிவிக்கிறார் அப்பர்.

ஆலவாயில்அப்பன்:

ஆலம் என்பது விஷத்தைக் குறிக்கும். நஞ்சுள்ள வாயை உடைய பாம்பு மதுரை மாநகருக்கு எல்லை காட்டியதால் மதுரை இப்பெயர் பெற்றது என்பது திருவிளையாடற்புராணம் காட்டும் உண்மை.

இங்குள்ள பெருமான் துவாதசாந்தப் பெருவெளியில் வீற்றிருப்பவன். என்பதை அப்பர் அத்தலத் தாண்டகத்தில் “என்தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை” என்கிறார். தலைக்குமேலே பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால் உள்ள இடமே துவாதசாந்தம் எனப்படும். அப்பெருமானிடத்தில் ஈடுபட்டு அருள்வேண்டுகிறார். “வேதியா வேதகீதா” என்னும் பதிகத்துள் ஏழாவது பாடலில் நான்கு வகையாக அழைக்கிறார். அழைப்பே அழகாய் அமைந்துள்ளது. தென்திரை நெஞ்சம் உண்ட குழகனே! கோலவில்லி கூத்தனே! மாத்தாயுள்ள அழகனே! ஆலவாயில் அப்பனே! வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்செழுமலர்ப் பாதம் காண அருள்செய்யாயே” என்று தோத்திரம் செய்யும் அழகே தனித்தன்மை வாய்ந்து விளங்குகிறது. அப்பாடல்(தி.4 ப.62 பா.7) காண்க.

வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன்

செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட

குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள

அழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.