பக்கம் எண் :

43
 

குறிக்கோள் இலாது கெட்டேன்:

உயர்பிறவி எடுத்துள்ள மனிதர்கள் குறிக்கோளுடன் வாழ்தல் வேண்டும். மற்ற பிறவிகள் மனவளர்ச்சியடையாத பகுத்தறிவில்லாத பிறவிகள். அவற்றைப் பகுத்தறிவு உள்ள மனிதன் நல்லவழியில் பயன்படுத்துகிறான். அதனால் அவையும் நலம் உறுகின்றன. மனிதனும் அவற்றால் நலம் பல பெறுகின்றான். பகுத்துணர்வுடைய மனிதன் இப்படித்தான் வாழவேண்டும். இப்படி வாழக்கூடாது என்ற குறிக்கோளுடன் வாழ இளமையிலேயே கற்றுக்கொள்ள வேண்டும். பெரியோர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குருமார்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்றேல் அவர்களது வாழ்வு வீணாகிவிடும். நாயன்மார்கள் வாழ்வெல்லாம் குறிக்கோளுடைய வாழ்வு. ஒவ்வொரு நாயனாரும் ஒவ்வொரு உயரிய குறிக்கோளை மேற்கொண்டு அதனினின்றும் வழுவாது வாழ்ந்து இறையருள் பெற்றனர். வாழ்வாங்கு வாழ்ந்தனர்.

அப்பர் சுவாமிகள் இளமையிலேயே பெற்றோரை இழந்தமையால் தமக்கையார் திலகவதியார் சொற்கேளாமல் சமண் சமயம் சார்ந்து துயருற்று மீண்டும் திலகவதியாரின் தவத்தால் சைவம் சார்ந்தவர். தம் வாழ்க்கை வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் திருக்கொண்டீச்சரத்துப் பாடல் ஒன்றில் தம் அநுபவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.பாலப்பருவம், காளைப்பருவம், முதுமைப் பருவம், இவற்றுள்அப்பர் முதுமையில் குறிக்கோள் கொண்டார்.அப்பாடல் (தி.4 ப.67 பா.9) காண்க.

பாலனாய்க் கழிந்தநாளும் பனிமலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்தநாளு மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்

சேலுலாம் பழன வேலித்திருக்கொண்டீச் சரத் துளானே.

நஞ்சு அமுதாக்குவித்தார்:

நம்பினார்கெடுவதில்லை, இது நான்குமறைத்தீர்ப்பு என்பார் சுப்பிரமணிய பாரதியார். இறைவனை நம்பி வழிபட்டால் அவர் நமக்கு எந்தவகையான தீங்கு வந்தாலும் அதனை எல்லாம் அகற்றி நன்மையே செய்வார். புலர்காலையிலும் அந்திமாலையிலும் தொடர்ந்து நாள்விடாமல் நமசிவாய என்னும் அஞ்செழுத்தை ஓதி இறைவனடிக்கு அன்புசெய்வார்க்கு எந்த இடர்ப்பாடும் இன்னல் செய்யாது விலகும். இதனை அப்பர் தம் அனுபவத்தில் வைத்து