பக்கம் எண் :

44
 

அருளிச் செய்கிறார். அமணர்கள் பால்சோற்றில் நஞ்சு கலந்து கொடுத்தபோது அதை அமுதமாக அஞ்செழுத்தோதி அருந்தினார். நனிபள்ளிப் பெருமான் அருளால் அப்பருக்கு அந்த நஞ்சும் அமுதமாயிற்று. அதை அகச்சான்றாக அப்பர் அருள்வது (தி.4 ப.70 பா.5)காண்க.

துஞ்சிருள் காலைமாலை தொடர்ச்சியை மறந்தி ராதே

அஞ்செழுத் தோதினாளு மரனடிக் கன்ப தாகும்

வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த

நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.

அதே பதிகத்தில் மற்றொரு பாடலில் “தொண்டர்தம்மை நரகத்தில் வீழஒட்டார் நனிபள்ளி அடிகளாரே”என்றும் உறுதிபடக் கூறியுள்ளமை குறித்துக்கொள்ளத் தக்கதாம்.

ஆடஎடுத்திட்ட பாதம்:

ஆட எடுத்த பாதத்தைத்தான் குஞ்சிதபாதம் என்கிறோம். அப்பாதம்தான் தக்கன் வேள்வியில் சந்திரனைச் சாடித் தேய்த்ததும், காலனை மார்க்கண்டேயருக்காக உதைத்ததும், நாரணன் நான்முகனும் தேட எடுத்ததும், தில்லையுள் சிற்றம்பலத்தில் ஆட எடுத்திட்டதுமாகும். அத்தகைய பாதமல்லவா நம்மை ஆட்கொண்டருளியது. தீயவர்களை நிக்கிரகம் செய்த பாதமே தூயவர்கட்கு அநுக்கிரகம் செய்தது என்ற குறிப்பு அறிந்து அனைவரும் இன்புறற் பாலதாம்.

கூரியபற்களையுடைய பூனை தன் குட்டிகளைத் துன்புறுத்தாமல் தன்வாயால் கவ்வித் தூக்கிக் காப்பாற்றும். அதே வாய்தான் எலிகளைச் சங்கரிக்கிறது என்பதை ஒப்புநோக்கி உணர்க.

ஒன்றரைக்கண்ணன்:

சிவபரம் பொருளுக்கு மூன்று கண்கள்.வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நடுக்கண் நெற்றிக்கண், அது அக்னி-நெருப்புக்கண்.

இம்மூன்றில் வலது கண் வலப்பாகம் உள்ள சிவனுக்குரியது. இடதுகண் இடப்பாகம் உள்ள சக்திக்கு உரியது. நடுக்கண்ணாகிய நெற்றிக்கண் இருவருக்கும் உரியது. எனவே ஆளுக்குப்பாதியாகிறது.