பக்கம் எண் :

10ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

திருவெண்ணி:
     திருவெண்ணி என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய ஊர். சங்க காலத்தில் இவ்வூரில் தோன்றிய பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் கரிகாற்சோழனின் வெண்ணிப்  போரைப்பற்றிக் கூறுகிறது. கரிகாலன் வெற்றி பெற்ற ஊர் வென்றி என்றாகி பிறகு வெண்ணி என ஆயிற்று என்பர்.
 
"கலிகொள்பாணர் வெண்ணிப்பறந்தலை"
 

-புறம் 66

 
"ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்"
 

-அகம் 55,246

 
"இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய-
வெண்ணித் தாக்கிய கரிகால் வளவன்"
 

-பொருநர்-147-8

  இருபெருவேந்தர் - சேர.பாண்டியர்கள். மேலும் பதினொரு வேளிரையும் வென்றமை குறிக்கப்படுகிறது.
  இத்தலம் மிகத் தொன்மையானது என்பதையும் இங்குள்ள பெருமானை நினைத்திருந்த நாவுக்கரசருக்கு இனிமை பயந்து அமுதூறிற்று என்பதையும் அவரே ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
 
வெண்ணித் தொல்நகர் மேய வெண்திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறும்என் நாவுக்கே
 

-தி. 5ப. 17பா. 2

  எனக்கு இனியர்;
  ஒருவன் தனக்கு இனியர் யார்? என்று எண்ணிப்பார்த்தால் தமக்குத் தாமே இனியவராகத் தோன்றுவர். இது சரியன்று. நமக்கு நாமே நன்மை செய்ததாக எண்ணிச் செய்யும் செயலெல்லாம் நமக்கு நல்லனவாக முடியாததைக் காண்கிறோம். நாம் செய்யும் செயல் நமக்குத் தீமையையும் செய்துவிடுகிறது. நமக்கு நன்மை செய்பவன் நம்மினும் இனியவன் ஒருவன் இருக்கின்றான். அவன் நம்முள் உயிர்க்காற்றாய் புறத்தும் அகத்தும் புகுந்து நம் உள்ளத்தே நிற்கின்றான். அவனே திரு இன்னம்பரில் எழுந்தருளியிருக்கின்றான். அவனைத் தொழுது உய்மின்கள் என்கிறார் அப்பர். மேலும், அவ்வின்னம்பர் ஈசன் நாம் செய்வனவற்றையெல்லாம் ஒரு சிறிதும் விடாது குறித்துக்கொண்டு இருக்கிறார் என்கிறார் அப்பர். அவ்விரு பாடல்களையும் சிந்திப்போமாக.
 
என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்இனி யானொரு வன்உளன்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு
என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
 

-தி. 5ப. 21பா. 1