சொற்பொருள் கருத்து ஒற்றுமை கண்டு மகிழ்க. அப்பாடல் காண்போம். |
கரைந்து கைதொழு வாரையும் காதலன் வரைந்து வைதெழு வாரையும் வாடலன் நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும் விரைந்து போவது வீழி மிழலைக்கே | |
-தி. 5ப. 12பா.1 |
இனியன் தன்னடைந்தார்க்கு: |
தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் இடைமருதீசர் இனியனாக இலங்குகிறார். இதனைக் "கனியினும் கட்டிபட்ட கரும்பினும்" என்ற பாடலால் விளக்குகிறார். குழந்தைப்பருவத்தில் கனியிலே விருப்பம், கொஞ்சம் முதிர்ந்தால் வெல்லக்கட்டியிலும், கற்கண்டிலும் விருப்பம் மிகுகிறது. காளைப் பருவத்தில் பாவையரிடத்து விருப்பம் உண்டாகிறது. அதை அடுத்து அரசியலில் இன்பம் காண்கிறது. இவற்றையெல்லாம் விட இடைமருதீசன் கழல் நீங்காத இனிமை பயப்பது என்று அதைவிட அதைவிட என்று உறழ்ச்சிப் பொருள் காணலாம். மேலும் நாம் ஏழாம் வேற்றுமை இடப்பொருளில் வைத்தும் பொருள் காணுதல் மிகவும் இனிமை பயக்குமாறுள்ளது. கனியின்கண் சுவையாயிருப்பவனும், கட்டிபட்ட கரும்பின்கண் சுவையாயிருப்பவனும் , பனிமலர்க்குழல் பாவை நல்லாரிடத்து இன்பமாயிருப்பவனும், தனிமுடி கவித்து ஆளும் அரசிடத்து இன்பமாயிருப்பவனும் இடைமருதூர்ப் பெருமானே என்று இனிமையாக இயம்பியுள்ளார். எல்லா இடத்தும் எல்லாப் பொருள்களிலும் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களிலும் அவன் உடனாயிருந்து நுகரச் செய்கிறான் என்ற கருத்தையே இப்பாடல் எளிமையாக உணர்த்துகிறது. |
ஆகமம் சொல்லும் பாங்கிக்கு: |
ஊழிக் காலத்தில் அஃதாவது யுக முடிவில் இறைவனும் இறைவியும் மட்டுமே உள்ளனர். அப்போது இருவரும் தனிமை கழிய பெருமான் பெருமாட்டிக்கு வருகிற யுகத்தில் எப்படியெல்லாம் மக்களை மன்னுயிர்களை ஈடேற்றம் செய்வது என்று திட்டமிடும் ஆகமங்களை பணைத்தெழுந்த மருதமரத்தடியில் உமாதேவியாருக்கு உபதேசித்தார். அப்பாடல் காண்க. |
துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோடு அணைய லாவது எமக்கரி தேஎனா இணையி லாஇடை மாமரு தில்எழு பணையில் ஆகமம் சொல்லும்தன் பாங்கிக்கே | |
-தி. 5ப. 15பா. 4 |
பாங்கி பக்கத்திருப்பவர் உமையம்மை. |