பாடல் வருமாறு: |
தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்கு ஏற்றம் கோயில்கண் டீர்இளங் கோயிலே | |
-தி. 5ப. 11. பா. 1 |
இது இளங்கோயில் என்றதனால், மூலத்தானம் பழமையாகிய முதுகோயில் என்பது தெளிவாகப் புரியும். |
கை தொழுவார், வைதெழுவார்: |
மனம் கசிந்துருகித் தொழுவாரையும் விரும்பி அருள் செய்வான். கடவுள் இல்லை என்று நீக்கி வைதெழுவாரையும் துன்பம் செய்யான். வைபவரும் தம்மக்களே ஆகலின் இறைவன் அவர்களையும் காலப்போக்கில் திருந்துமாறு அருள்செய்து ஆட்கொள்வான். இதே கருத்தை ஞானசம்பந்தரும் இரண்டாம் திருமுறையில் திருவாழ்கொளிபுத்தூர்ப் பதிகப் (தி. 2ப.94பா.5) பாடலில், |
"பரவுவாரையும் உடையார் பழித்திகழ்வாரையும் உடையார் ....................... வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூருளாரே" | |
எனக் குறிப்பிட்டுள்ளமை ஒப்புநோக்கி இன்புறற்பாலது. |
இப்பாடலில் குறளின் சொற்பொருட்சாயல் வந்துள்ளமை கண்டு மகிழலாம். |
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல் | |
-குறள் 196 |
என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரை கூறும்போது, மகன் எனல் என்ற சொல்லுக்கு பயனில் சொல் பாராட்டுவானை மகனென்று சொல்லற்க எனவும், மக்கட் பதடி எனல் என்ற சொல்லுக்கு மக்களில் பதர் என்று சொல்லுக எனவும் கூறுகிறார். எனல் என்ற சொல் சொல்லற்க என்றும் சொல்லுக என்றும் பொருள் தருதலைக் காண்கிறோம். |
இக்கருத்தை ஓரளவு இப்பாடலில் வரும் காதலன், வாடலன் என்ற சொல்லிலும் கண்டு மகிழலாம். காதலன் - விருப்புடையன், வாடலன் - வாட்டம் செய்யான். |
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை | |
-குறள் 155 |
என்ற குறட்கருத்தையும் இப்பாடலில் காணநேர்கிறது. தொழுதெழுதல் மனைவியின் செயல், வைதெழுதல் புறச்சமயத்தார் செயல். |